மின் கட்டண உயர்வை திரும்ப பெற எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்
புதுச்சேரி: மக்கள் விரோத மின் கட்டண உயர்வை அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை; என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு, மக்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், நான்கு மாத இடைவெளியில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் போதே மின் கட்டண உயர்வை தடுக்க முடியாத அரசு, தனியார் கட்டுப்பாட்டில் சென்றால் எப்படி மின் கட்டண உயர்வை தடுத்து விடும். மின் கட்டண உயர்வால், வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாடகை தொகையை விட அதிகமாக மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 400 கோடி ரூபாய் செலவில் 'பிரீபெய்டு' மீட்டர் அமைப்பது அவசியமா? என்ற கேள்விக்கு மின்துறை அமைச்சர் ஸ்மார்ட் மீட்டர் இன்னும் வாங்கப்படவில்லை என்றார். ஒருபுறம் பிரீபெய்டு மீட்டர், மற்றொரு புறம் கட்டண உயர்வு மூலம் இருபுறமும் தாக்குதல் நடத்துவது தான் இரட்டை இன்ஜின் ஆட்சியா? மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். முற்றுகை போராட்டம் மின் கட்டணத்தை உயர்த்திய பா.ஜ., - என்.ஆர். காங்., கூட்டணி அரசை கண்டித்து, வரும் 4ம் தேதி காலை 10:00 மணிக்கு, மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி தேவாலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தி.மு.க., சார்பில் நடத்தப்படும். இதில் இண்டி கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர். இவ்வாறு கூறப் பட்டுள்ளது.