| ADDED : நவ 27, 2025 04:34 AM
புதுச்சேரி: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக மாறக்கூடும் என்பதால் புதுச்சேரிக்கு நாளை முதல் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் குலோத்துங்கன் செய்திக்குறிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிக்கையின்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் வரும் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை புயலாக மாறக்கூடும். இதன் காரணமாக, புதுச்சேரிக்கு மிக கன மற்றும் அதி தீவிர மழை பெய்யக்கூடும் என, ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆகையால், அவசியம் இன்றி வெளியே செல்வதை தவிர்க்கவும். மின் கம்பங்கள், மரங்கள், பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடங்கள் கீழே நிற்க வேண்டாம். குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம். அத்தியாவசிய மருந்துகளை வாங்கி வைத்து கொள்ளவும். அனைத்து முக்கிய ஆவணங்களையும் பாதுகாப்பாக வைக்கவும். மின்சாரம் தடைப்பட்டால் அனைத்து மின் சாதனங்களையும் அணைத்து வைக்கவும். வதந்திகளை நம்பாமல், அரசு அளிக்கும் வழிகாட்டுதல் மற்றும் எரிச்சரிக்கைகளை மட்டும் பின்பற்றவும். பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களுக்கு 1077, 1070, 112 அல்லது 94889 81070 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். அதிகாரபூர்வ எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் sachet app- னை மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்தவும்.