உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தேர்தலில் உணவுக்கு பிடித்தம் செய்த கூடுதல் தொகை திருப்பி தர உத்தரவு

 தேர்தலில் உணவுக்கு பிடித்தம் செய்த கூடுதல் தொகை திருப்பி தர உத்தரவு

புதுச்சேரி: ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் சாப்பிட்டிற்காக கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை திருப்பி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது. இத்தேர்தலுக்காக மொத்தம் 1,099 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஓட்டுச் சாவடிகளில் தலா ஒரு தலைமை அலுவலர், மூன்று ஓட்டுப் பதிவு அலுவலர்கள், ஒரு பல்நோக்கு ஊழியர் மற்றும் ஒரு ஓட்டுச்சாவடி அலுவலர் ஓட்டுப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு, ஓட்டுப்பதிவு முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வேனில் ஏற்றும் போதே தேர்தல் ஆணையம் வழங்கும் மதிப்பூதியம் வழங்கப்பட்டது. அதில், தலைமை அலுவலருக்கு ரூ.3,500, ஓட்டுப்பதிவு அலுவலர் நிலை 1-க்கு ரூ.3,000, ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நிலை 2 மற்றும் நிலை 3க்கு தலா ரூ.2,700ம், பல்நோக்கு ஊழியருக்கு ரூ.1,200 மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலருக்கு ரூ.1,500 வழங்கப்பட்டது. இந்த பணத்தில் காலை டிபன் (2 இட்லி, பூரி கிழங்கு, கேசரி), மதியம் கலவை (வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் சப்பாத்தி) , சாதம் தொகுப்பு வழங்கியதற்காக ரூ.300 முதல் ரூ.400 வரை பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், முத்தியால்பேட்டை மற்றும் ராஜ்பவன் ஆகிய இரு தொகுதிகளின் ஓட்டுச் சாவடிகளில் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியத்தில் சாப்பாட்டிற்காக தலைமை அலுவலர் மற்றும் ஓட்டுப்பதிவு அலுவலர்களிடம் தலா ஆயிரம் ரூபாயும், பல்நோக்கு ஊழியரிடம் ரூ.500 பிடித்தம் செய்யப்பட்டது. பிற தொகுதிகளில் சாப்பாட்டிற்கு ரூ. 300 முதல் 400 பிடித்தம் செய்துள்ள நிலையில், இரு தொகுதிகளில் மட்டும் ரூ.1,000 பிடித்தம் செய்திருப்பது ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கடந்த 12ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்புகார் குறித்து ஆய்வு செய்த தேர்தல் துறை, இரு தொகுதிகளில் கூடுதலாக பிடித்தம் செய்த தொகுதியை திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர் மற்றம் முதல் நிலை ஓட்டுச்சாவடி அலுவலருக்கு ரூ.400ம், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை அலுவலர்களுக்கு ரூ.100 திருப்பி வழங்கப்பட உள்ளது. சம்மந்தப்பட்ட அலுவலர்கள், வரும் 27 ம் தேதிக்குள், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகமான புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி