பள்ளியை மூட எதிர்ப்பு : பெற்றோர் சாலை மறியல்
புதுச்சேரி : புதுச்சேரியில், பழமையான பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி நகரின் மையப் பகுதியான புஸ்சி வீதியில், அரசு நிதியுதவி பெறும் ஜெயராணி உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பழமையான இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை சுமார் 1,500 மாணவ, மாணவியர் படித்து வந்தனர். கொரோனாவிற்கு பிறகு மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்தது. சில வகுப்புகளில் 10க்கும் குறைவாகவே மாணவர்கள் உள்ளனர்.இதனால், பள்ளி நிர்வாகம், பள்ளியை அடுத்த கல்வி ஆண்டு முதல் மூட முடிவு செய்து, இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடத்தவில்லை. மேலும், பள்ளியில் படிக்கும் மாணவர்களை தங்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் உப்பளம் மற்றும் நெல்லித்தோப்பு இமாகுலேட் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர், பழமையான பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை பள்ளி எதிரே புஸ்சி வீதியின் தங்கள் பிள்ளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து தடைப்பட்டது.தகவலறிந்த ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளி நிர்வாகம் இந்தாண்டு பள்ளியை மூடப்போவதில்லை. அடுத்த கல்வி ஆண்டில் தான் மூடப் போகிறோம். தற்போது 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், எங்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ம் வகுப்பு சேர்ந்து கொள்ளலாம் எனக் கூறினர். இதனை பெற்றோர் ஏற்க மறுத்து பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றனர்.அப்போது அங்கு வந்த நேரு எம்.எல்.ஏ., இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி, தொடர்ந்து பள்ளியை நடத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனையேற்று பெற்றோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். . இந்த மறியலால் புஸ்சி வீதியில் 30 நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டது.