அரசு பஸ்சில் திடீர் புகை பயணிகள் தப்பினர்
பாகூர்: கடலுாரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தமிழக அரசு பஸ்சின் பின்புற சக்கரத்தில் இருந்து கரும் புகை வெளியேறியதால், பரபரப்பு நிலவியது. கடலுாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று மதியம் 3:30 மணியளவில் தமிழக அரசு பஸ் (டி.என். 32 என் 4944) ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுச்சேரி - கடலுார் சாலை, கிருமாம்பாக்கம் அருகே வந்தபோது, திடீரென பஸ்சின் பின் புறத்தில் இடது பக்க சக்கரத்தில் இருந்து கரும் புகை வெளியேறியது. இதையறிந்த டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். புகை வெளியேறிதால், அச்சமடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து அலறியடித்து கீழே இறங்கினர். டிரைவர் பஸ்சின் கீழ் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது, பின்புற சக்கரத்தின் பிரேக் அதிகப்படியான உராய்வு காரணமாக வெப்பமாக அதிலிருந்து புகை வெளியேறியது தெரியவந்தது. இது குறித்து கடலுார் பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின், வேறு பஸ் மூலமாக பயணிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.