உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தப்பியோடிய கைதியை விரட்டி பிடித்த போலீசார்: புதுச்சேரியில் பரபரப்பு

தப்பியோடிய கைதியை விரட்டி பிடித்த போலீசார்: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி, முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.,26) கொம்பாக்கம், வேல்வராம்பட்டு சாலையில் ரோந்து சென்றனர். செட்டிக்குளம் பகுதியில் இரண்டு வாலிபர்கள் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசாரை பார்த்ததும் இரண்டு வாலிபர்களும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் முதலியார்பேட்டை, உடையார்தோப்பு பகுதியை சேர்ந்த ஆனந்த் மகன் கோகுல்சரண்,19; கொம்பாக்கம் பேட் புதுநகர் கில்பர்ட் மகன் மைக்கேல்ராஜ்,20; ஆகியோர் என, தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கோகுல்சரண், மைக்கேல்ராஜை உடல நல பரிசோதனைக்காக போலீசார் இன்று (நவ.,27) காலை 10:00 மணிக்கு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் வருகைக்காக காத்திருந்தபோது, கோகுல்சரண் மட்டும் அங்கிருந்து தப்பி ஓடினார். பாதுகாப்பிற்கு வந்த போலீசார் கோகுல்சரணை விரட்டிச் சென்றார். விக்டர் சிமோனல் வீதி மற்றும் செஞ்சி சாலை வழியாக 500 மீட்டர் துாரம் ஓடிய கோகுல்சரணை, அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கும் போக்கு காட்டிய கோகுல்சரண் பெரியவாய்க்காலில் குதித்து தப்பியோடினார். தொடர்ந்து அவரை விரட்டி சென்ற போலீசாரும் வாய்க்காலில் குதித்து கோகுல்சரணை மடக்கி பிடித்தனர். பின் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை முடிந்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதி தப்பியோடிய சம்பவத்தால், புதுச்சேரி அரசு மருத்துவமனை மற்றும் செஞ்சி சாலை பகுதிகளில் பரபரப்பு நிலவியது. போலீசார் ஆயுதம் எடுத்து: செல்லாதது ஏன்? போலீசார் குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைக்கும் முன் மருத்துவபரிசோதனை செய்வது வழக்கம். மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது குற்றசம்பவங்களுக்கு தகுந்தாற்போல் துப்பாக்கியுடன் போலீசார் செல்வது வழக்கம். ஆனால் கோகுல்சரணை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லும் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் துளியும் பயமின்றி கோகுல்சரண் தப்பியோடி உள்ளார். அவர் தப்பியோடும் போது, தற்காப்பிற்காக ஏதேனும் ஆயுதங்கள் மூலம் பொதுமக்களை தாக்கி இருந்தால், அதற்கு யார் பொறுப்பு. எனவே போலீசார் கைதிகளை தகுந்த ஆயுத பாதுகாப்போடு பொது இடங்களில் அழைத்து செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !