உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சொத்து வழிகாட்டி மதிப்பு 15 சதவீதம்... உயருகிறது; காலதாமதமாகும் பத்திர பதிவு

சொத்து வழிகாட்டி மதிப்பு 15 சதவீதம்... உயருகிறது; காலதாமதமாகும் பத்திர பதிவு

புதுச்சேரி: சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட சூழ்நிலையில் பத்திரங்கள் பெண்டிங் போடப்பட்டு பதியப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் நிலம், மனை விற்கப்படும்போது, பத்திர பதிவு அலுவலங்களில் அரசுக்கு 10 சதவீத முத்திரை தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வருவாயை, வளர்ச்சி பணிக்காக, பத்திர பதிவு துறையும், உள்ளாட்சி துறையும் 5 சதவீதம் என்ற விகிதத்தில் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும். அத்துடன், பத்திரப்பதிவு துறை, ஒவ்வொரு ஆண்டும் விவசாய நிலம் மற்றும் வீட்டுமனைகளுக்கு வழிகாட்டி மதிப்பு வெளியிட்டு வருகிறது. நிலங்களின் விலை உயரும் போது அதற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படுவது வழக்கம். புதிய வழிகாட்டி மதிப்பு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துவிடும். இருப்பினும், தற்போது ஏப்ரல் மாதம் கடந்தும் புதிய சொத்து வழிகாட்டி மதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் பத்திர பதிவுகள் எந்த தடையில்லாமல் பழைய ஜி.எல்.ஆர்., மதிப்பில் பதிவு செய்யப்பட்டு வந்தன. அந்த பத்திரங்களும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையில் நேற்று முதல் பத்திர பதிவுகள் பெண்டிங் போடப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகின்றது. பத்திரங்கள் உரியவர்களிடம் கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக புதிய வழிகாட்டி மதிப்பு வெளியாகும்போது அந்த இடைவெளி தொகையும் செலுத்தி பத்திரங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மாநிலத்தில் சொத்து வழிகாட்டி மதிப்பு கடந்த 2013-14ம் ஆண்டில் கடைசியாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2016-17ம் ஆண்டு சொத்து வழிகாட்டி மதிப்பு அதிகமாக உள்ளது என்று 25 சதவீதம் குறைக்கப்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகளாக சொத்து வழிகாட்டி மதிப்பு புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தப்படவில்லை. அதாவது 12 ஆண்டுகளாக புதுச்சேரியில் சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால் தற்போது அனைத்து பகுதிகளிலும் 10 முதல் 15 சதவீதம் வரை சொத்து வழிகாட்டி மதிப்பினை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது, என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி அரசு பட்ஜெட்டில் பல்வேறு புதிய நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. நிதி நெருக்கடியில் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியாது. இது வெற்று அறிவிப்பு என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றது. சொன்னதை செய்யும் அரசு எங்களுடையது. புதிய திட்டங்களையும் செயல்படுத்துவோம் என்று முதல்வர் ரங்கசாமி பதிலடி கொடுத்து வருகின்றார். பத்திர பதிவு துறையின் வருவாயை அதிகரித்து அரசின் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.

பத்திர பதிவு அலுவலகங்களில் வாக்குவாதம்

அமாவாசை தினமான நேற்று புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய நேற்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாலை வரை எந்த பத்திரப் பதிவு அலுவலகத்திலும் பத்திரப்பதிவு செய்யவில்லை காத்திருந்த பொதுமக்கள் கடும் எரிச்சல் அடைந்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பதிவாளர் தயாளன் கூறும்போது, ஜி.எல்.ஆர்., சர்வர் காரணமாக பத்திர பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. அவை சரி செய்யப்பட்டு பத்திர பதிவுகள் நடந்தன. புதிய சொத்து வழிகாட்டி காரணமாக பெண்டிங் போட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி