பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு
புதுச்சேரி: புதுச்சேரி பி.ஆர்.டி.சி.யில் 2015ல் பணியில் அமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் கூட்டுக்கூழு பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.இதுகுறித்துகூட்டுக்குழு தலைவர் சங்கர், செயலாளர் குணசேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி) கடந்த 2015ம் ஆண்டு முதல் 276 பேர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பணியாற்றி வருகிறோம். கடந்த 7 ஆண்டுகளாக பணி நிரந்தரம் வேண்டி பல முறை முதல்வர், அமைச்சர்கள், துறை செயலாளர்கள், மேலாண் இயக்குனர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்.இன்று வரை எங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இதனால், குடும்ப வாழ்வாதாரத்திற்காக பலகட்ட போராட்டங்களை நடத்த முடிவெடுத்துள்ளோம். வரும் 9ம் தேதி பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி வாயிற்கூட்டமும், 16ம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், 23ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.