இரண்டாம் கட்ட எம்.டி.எஸ்., கவுன்சிலிங் மாணவர்களின் தகுதி பட்டியல் வெளியீடு
புதுச்சேரி : இரண்டாம் கட்ட முதுநிலை கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களின் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது. சென்டாக் எம்.டி.எஸ்., முதுநிலை படிப்புகளுக்கு அண்மையில் முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி இடங்கள் ஒதுக்கப்பட்டது. சீட் கிடைத்த மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்தனர். முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லுாரியில் 8 பேர், மாகி 3, வெங்கடேஷ்வரா 3 என, மொத்தம் 14 பேர் சேர்ந்தனர். அடுத்து எம்.டி.எஸ்., படிப்பிற்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்த திட்டமிட்டுள்ள சென்டாக் கல்லுாரி முன்னுரிமையை கடந்த 23ம் தேதி வரை கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மருத்துவ மாணவர்களின் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 37 பேர், நிர்வாக இடங்களுக்கு 10 பேர் என, மொத்தம் 47 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை கூடுதல் தகவல்களுக்கு 0413-2655570 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.