உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அரசின் டில்லி கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பு படுமோசம் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் விரக்தி

புதுச்சேரி அரசின் டில்லி கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பு படுமோசம் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் விரக்தி

புதுச்சேரி : புதுச்சேரி அரசின் கெஸ்ட் ஹவுஸ் படுமோசமாக பராமரிக்கப்பட்டு வருவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் தலைநகரான டில்லியில் புதுச்சேரி மாநிலத்திற்கென தனி கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அரசு பயணமாக டில்லி செல்லும்போதெல்லாம் கவர்னர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள் இங்கு தங்கி பணியை முடித்துவிட்டு திரும்புகின்றனர். இதேபோல், தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களுக்கும் தலைநகரான டில்லியில் தனி கெஸ்ட் ஹவுஸ்கள் உள்ளன. மற்ற மாநிலங்களுக்கான கெஸ்ட் ஹவுஸ்கள் தகதகவென மின்னிக்கொண்டு இருக்க, புதுச்சேரி அரசின் கெஸ்ட் அவுஸ் பராமரிப்பு படுமோசமாக உள்ளது.விடுதியின் வெளிப்புற தோற்றம் மட்டும் பளபளவென ஜொலிக்கின்றது. சூட் அறைகளின் பராமரிப்பு படுமோசமாக உள்ளது. கரப்பான் பூச்சிகளும், மூட்டை பூச்சிகளும் பாடாய் படுத்துகின்றன. ஆனால் அவற்றை ஒழிப்பதற்கான எந்த பணியையும் மேற்கொள்ளப்படவில்லை. கெஸ்ட் ஹவுசில் தங்கும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் நொந்துபோய் புதுச்சேரி திரும்புகின்றனர்.அடுத்த முறை, அரசு பயணம் செல்லும்போது மூட்டை பூச்சிகளுக்கு பயந்து தனியாக வேறு எங்காவது ேஹாட்டல்களில் அறை எடுத்து தங்குகின்றனர் மக்கள் பிரதிநிதிகள்.கெஸ்ட் ஹவுஸில் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் உள்ளனர். ஆனால் அறைகளில் பெட் ஷீட்களை மாற்றுவது கிடையாது. ரூம்களை சரிவர துடைப்பதும் இல்லை. அறைகளின் பராமரிப்பே மோசம் என்கிற சூழ்நிலையில், கழிவறை பராமரிப்பு பற்றி சொல்ல வேண்டியதில்லை. பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் பினாயில் கூட வைப்பது கிடையாது. குளியலறை, கழிவறையின் பிட்டிங்கெல்லாம் துருபிடித்து பேய் வீடு போன்று பரிதாபமாக காட்சியளிக்கின்றது. அவ்வப்போது பெயிண்ட் அடித்து புது கட்டடம் போன்று மெருகேற்றி வருகின்றனர்.பொதுவாகவே அரசு கெஸ்ட் ஹவுஸ்களில் உணவு விலை கம்மியாக இருக்கும். ஆனால் புதுச்சேரி அரசின் டில்லி கெஸ்ட் ஹவுசிலில் எல்லாம் தலை கீழ். விலையெல்லாம் விர்.. இரண்டு இட்லி விலை 50 ரூபாய். ஒரு தோசை 150 ரூபாய். சிக்கன் பிரியாணி 200 ரூபாய். மட்டன் பிரியாணி 250 ரூபாய். இது என்ன அநியாயமாக இருக்கின்றது; பகல் கொள்ளையாக இருக்கின்றது என்று கெஸ்ட் அவுசில் தங்குபவர்கள் புலம்பியபடி திரும்புகின்றனர்.அடுத்து விருந்தோம்பல். அது டில்லி கெஸ்ட் ஹவுசில் நீங்கள் எதிர்பார்க்க கூடாத ஒன்று. ரூம் எடுக்கும்போது இரண்டு தண்ணீர் பாட்டீல்கள் தருவார்கள். அத்தோடு நமக்கும் கெஸ்ட் ஹவுஸ் ஊழியர்களுக்கும் இருக்கின்ற தொடர்பு முடிந்து போய்ச்சு. துண்டு, சோப்பு எதுவுமே தரமாட்டார்கள். அப்படியே இண்டர்காமில் அழைத்து ஏதாவது உதவி கேட்டாலும் ஒன்றுமே கிடைக்காது. பல மணி நேரம் காத்திருந்து ஏமாந்து போவது தான் மிச்சம்.யாரிடம் சொல்லி இந்த பூனைகளுக்கு மணி கட்டுவது தெரியவில்லை என்றே மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் மனம் குமுறி வருகின்றனர். தலைநகரான டில்லியில் புதுச்சேரி அரசின் கெஸ்ட் ஹவுஸ் அமைந்திருப்பது மாநிலத்திற்கு பெருமை. அந்த கெஸ்ட் ஹவுஸ் மற்ற மாநிலங்களை போன்று விருந்தோம்பலுடன் கூடிய கனிவான சேவையாவது தரக்கூடாதா என்பதே மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஏக்கமாக உள்ளது.அரசின் கெஸ்ட் ஹவுசிற்கு தேவையான நிதி ஒதுக்கி, மேம்படுத்தவும், தங்குபவர்களுக்கும் விருந்தோம்பலுடன் கூடிய கனிவான சேவை கிடைக்கவும் ஆய்வு கூட்டம் நடத்தி, கவர்னர், முதல்வர் உத்தரவிட வேண்டும்.

எப்பவுமே ஹஸ்புல்லாம்

நம்முடைய மக்கள் பிரநிதிகள் அத்திபூத்தாற்போன்று தான் டில்லி செல்லுகின்றனர். அப்படியே சென்றாலும் புதுச்சேரி டில்லி கெஸ்ட் ஹவுசில் தங்க ஆர்வமும் காட்டுவதில்லை. ஆனால் எப்போது கேட்டாலும் புதுச்சேரி கெஸ்ட் ஹவுஸ்புல் என்றே பதில் வருகின்றது. சரி என்று நேரில் போய் பார்த்தால் எல்லாம் ரூம்களே காலியாக தான் இருக்கின்றது. எதற்காக கெஸ்ட் அவுஸ் பணியாளர்கள் அரசின் கஜானாவிற்கு வரும் வருவாயை தடுக்கின்றனர். யாருக்காக இப்படி திசைமாற்றி விடுகின்றனர் என்பதையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

இவங்கயெல்லாம் யார்...

புதுச்சேரி அரசின் டில்லி கெஸ்ட் ஹவுசில், 50 பணியாளர்கள் வரை உள்ளனர். ஆனால் யாருக்கும் தமிழ் தெரியவில்லை. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா என பல மாநிலங்களை சேர்ந்தவர்களை இழுத்து பிடித்து வேலைக்கு வைத்துள்ளனர். புதுச்சேரி ேஹாட்டல் மேலாண்மை நிறுவனம் உள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பலரும் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஆனால் தமிழ் தெரியாத, புதுச்சேரி மாநிலத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் டில்லி கெஸ்ட் அவுசில் பணிக்கு சேர்ந்துள்ளனர். இவர்கள் யார். இவங்கெல்லாம் எங்கிருந்து வந்தாங்க. இவர்களை யார் பணியில் சேர்த்தது. இது பற்றி தனியாக கவர்னர் விசாரணை நடத்த வேண்டும்.

டில்லி கெஸ்ட் வசதிகள்

புதுச்சேரி அரசின் டில்லி கெஸ்ட் ஹவுஸ் மூன்று தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் ஒரு வி.வி.ஐ.பி.. சூட் உள்ளது. முதல் தளத்தில் 4 வி.ஐ.பி., அறை, 2 டபுள் ரூம்கள் உள்ளன. இரண்டாம் தளத்தில் 6 சிங்கிள் ரூம், 6 டபுள் ரூம்கள் உள்ளன. மூன்றாம் தளத்தில் 2 சிங்கிள் ரூம்கள், 5 டபுள் ரூம்கள் உள்ளன. கவர்னர், மக்கள் பிரதிநிதிகள் தங்காத நேரத்தில் மற்றவர்களும் இங்கு தங்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை