ரி ச்சார்ஜபிள் பேட்டரி ஆர்டர் செய்து ரூ.1.05 லட்சம் இழந்த புதுச்சேரி நபர்
புதுச்சேரி: ஆன்லைனில் ரிச்சார்ஜபிள் பேட்டரி ஆர்டர் செய்து, தட்டாஞ்சாவடியை சேர்ந்த நபர் ரூ.1.05 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.புதுச்சேரி, கோரிமேடு, பிரியதர்ஷினி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழப்பன். இவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.இதைநம்பி தமிழப்பன் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 355 செலுத்தி, அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஆரோக்கியநாதன் ஆன்லைன் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு ரிச்சார்ஜபிள் பேட்டரி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சாதாரண பேட்டரி மட்டும் டெலிவரி செய்யப்பட்டது. இதன் மூலம் ஆரோக்கிய நாதனிடம் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.இதேபோல், கருவடிக்குப்பம் ரகுமான் 1 லட்சத்து 24 ஆயிரம், கனகசெட்டிக்குளம் விஜய் 37 ஆயிரம், வில்லியனுார் மணிமாறன் 3 ஆயிரத்து 500, வைத்திகுப்பம் பிரதீப்ராஜ் ஆயிரத்து 500, வில்லியனுார் சூசைராஜ் 3 ஆயிரத்து 500, ரெட்டியார்பாளையம் வெங்கடபரமானந்தம் 8 ஆயிரத்து 800 என, மொத்தம் 8 பேர் 4 லட்சத்து 64 ஆயிரத்து 655 ரூபாய் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.