| ADDED : நவ 28, 2025 04:37 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதால்,தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தி உள்ளார். அவரது, அறிக்கை; நவம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில், புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த மழை பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இம்முறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் இருந்து, மழை தீவிரமாகும் நேரங்களில் உடனடி கண்காணிப்புடன் செயல்பட்டு, நீரோட்டத்தை சீர்படுத்த வேண்டும். தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கினால், அப்பகுதி மக்களை அருகிலுள்ள அரசு பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள் போன்ற பாதுகாப்பு முகாம்களுக்கு உடனே அனுப்ப வேண்டும். படகு உள்ளிட்ட அவசரகால மீட்பு வசதிகளை, சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பல்வேறு பணிகளுக்கு அனுப்பட்டுள்ள வருவாய்த்துறை அதிகாரிகளை உடனடியாக திரும்பப் பெற செய்து, மழை நிவாரண பணிகளில் ஈடுபடுத்தி, அவசரகால உதவி மையங்கள் உடனே அமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.