| ADDED : ஜூலை 24, 2011 12:05 AM
புதுச்சேரி : தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் வரவேண்டும் என அமைச்சர் கல்யாணசுந்தரம் பேசினார். பள்ளிக்கல்வி இயக்கம் சார்பில் சின்னாத்தா பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவிற்கு திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் செல்வி வரவேற்றார். விளையாட்டு மற்றும் இளைஞர் நல துணை இயக்குனர் முத்துவேல், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கிருஷ்ணராஜூ, பள்ளிக்கல்வி இயக்குனர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அரசு கொறடா நேரு, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். விழாவில் கல்வித் துறை அமைச்சர் கல்யாணசுந்தரம் பேசுகையில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி, சென்டாக்கில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார். கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுகிறது. மாணவர்கள் அரசு திட்டங்களைப் பயன்படுத்தி சிறப்பான மதிப்பெண்கள் பெற வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் வரவேண்டும் என்றார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.