உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலதிபரிடம் ரூ.2.44 கோடி மோசடி; புதுச்சேரி ஆசாமி தென்காசியில் கைது

தொழிலதிபரிடம் ரூ.2.44 கோடி மோசடி; புதுச்சேரி ஆசாமி தென்காசியில் கைது

புதுச்சேரி: மக்காச்சோளம் வாங்கித் தருவதாக புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.2.44 கோடி மோசடி செய்த ஆசாமியை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தம்பதியை தேடி வருகின்றனர்.புதுச்சேரி, வெங்கட்டா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். தொழிலதிபரான இவர், ஸ்ரீ சாய் டிரேடர்ஸ் நிறுவனம் மூலம் கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவைகளை வாங்கி, கம்பெனிக்கு விற்பனை செய்து வருகிறார். இவரை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்த, முதலியார்பேட்டையை சேர்ந்த சண்முகம் மகன் செல்வம், 42. முதலியார்பேட்டை, டிஜிட்டல் அக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் புவனேஸ்வர் மற்றும் அவரது மனைவி சுபத்ரா ஆகியோரை அறிமுகப்படுத்தி, இருவரும், பல்வேறு மாநிலங்களில் சோளம் கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருவதாகவும், உங்களுக்கு தேவையான 2,500 டன் மக்காச்சோளத்தை வாங்கி தருவதாக கூறினார். அதனை நம்பிய சீனிவாசன், முன்பணமாக பல்வேறு தவணைகளாக ரூ. 2.44 கோடியை புவனேஸ்வர் மற்றும் சுபத்ரா ஆகியோரிடம் வழங்கினார். ஆனால், அவர்கள் கூறியபடி மக்காச்சோளத்தை வாங்கித் தரவில்லை. சந்தேகமடைந்த சீனிவாசன், முதலியார்பேட்டையில் உள்ள டிஜிட்டல் அக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது, அந்த நிறுவனம் பல மாதங்களாக மூடியிருப்பது தெரிய வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சீனிவாசன், அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து, புவனேஸ்வர், அவரது மனைவி சுபத்ரா மற்றும் இடைத்தரகர் செல்வம் ஆகியோரை தேடி வந்தனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தனியார் விடுதியில் பதுங்கியிருந்த செல்வத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை, அழைத்து வந்து புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள புவனேஸ்வர் மற்றும் சுபத்ராவை தேடிவருகின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செல்வம் மீது ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் இதேபோன்ற மோசடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ