உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் மீண்டும் மழை: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

புதுச்சேரியில் மீண்டும் மழை: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 'பெஞ்சல்' புயலுக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரியை கடந்த நவ.30ம் தேதி, தாக்கிய 'பெஞ்சல்' புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் பெய்த மழையால் பொது மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகினர்.இந்நிலையில், மீண்டும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், 5 நாட்களுக்கு புதுச்சேரியில் கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இந்நிலையில் நேற்று காலை 7:30 மணிக்கு பெய்ய துவங்கிய சாரல் மழை, அடுத்த சில நிமிடங்களுக்கு பிறகு கனமழை பெய்ய துவங்கியது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழை காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. நேற்று காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணிவரை 19 மி.மீ., மழை பதிவாகியது. மழை நள்ளிரவுக்கு பிறகு தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுப்பணித்துறை மூலம் தேவையான இடங்களில் அதிகளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். ஜே.சி.பி., இயந்திரம், மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். பேரிடர் காலத்தில் அதிகாரிகள் விரைவாக பணியாற்ற வேண்டும். மழைநீர் சூழ வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்திட கலெக்டர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை