புதுச்சேரி: நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், கூட்டணியில் இருந்து பா.ஜ.,வை கழற்றி விடுவதற்கு, முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், காங்., - தி.மு.க., கூட்டணியை வீழ்த்தி என்.ஆர். காங்., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. என்.ஆர். காங்., கட்சி 10 இடங்களிலும், பா.ஜ., 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து, பெரும்பான்மை பலத்துடன் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இரு கட்சிகள் இடையே பலமுறை உரசல்கள் எழுந்தாலும், மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு பக்கபலமாக இருப்பதால், புதுச்சேரியில் நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு துறைகளில் 3,500 அதிகமானோருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. தேர்தலுக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய மாதங்களே உள்ளதால், கடந்த தேர்தலை போலவே என்.ஆர். காங்., கட்சியுடன் கூட்டணி தொடரும் என பா.ஜ., நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. ஆனால், என்.ஆர். காங்., கட்சியின் தலைவரான ரங்கசாமி, பா.ஜ.,வை கழற்றிவிட்டு விஜயின் த.வெ.க.,வுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ள உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்கும் 'ரோடு ஷோ' புதுச்சேரியில் நடத்தப்பட உள்ளது. வரும் 5ம் தேதியன்று ரோடு ஷோவை நடத்துவதற்கு முடிவு செய்து, அவசர அவசரமாக அனுமதி கேட்டு போலீசிடம் த.வெ.க., நிர்வாகிகள் கடிதம் அளித்துள்ளனர். புதுச்சேரியில் விஜயின் 'ரோடு ஷோ'வுக்கு போலீஸ் உயரதிகாரிகள் அனுமதி மறுத்தாலும், மைதானத்தில் விஜய் பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டம் நல்லமுறையில் நடப்பதற்கும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வருவதற்கும் முதல்வர் ரங்கசாமி உதவியாகவும், உறுதுணையாகவும் உள்ளார். பா.ஜ.,வை கடுமையாக விமர்சனம் செய்யும் விஜயுடன், ரங்கசாமி காட்டும் நெருக்கம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக, டில்லி பிரமுகர் ஒருவர் கூறியதாவது: பா.ஜ.,வுடன் கூட்டணியை தொடர ரங்கசாமி விரும்பவில்லை; கூட்டணியை முறித்து கொண்டு, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார். இருந்தபோதும், கூட்டணியை முறிப்பது தொடர்பாக இப்போது அறிவிக்க மாட்டார். டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் மத்திய அரசு அளிக்கும் கூடுதல் நிதியுதவியை பெற்று கொள்வார். பல்வேறு திட்டங்களையும் மத்தியில் இருந்து பெற்று செயல்படுத்துவார். சட்டசபை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் கடைசி நேரத்தில், பிப்ரவரி மாதத்தில் பா.ஜ.,வை கழற்றி விட்டு விடுவார். அதாவது, கூட்டணியை முறித்து கொள்வார். பா.ஜ., மீது ஒட்டுமொத்த பழியையும் போட்டுவிட்டு அனைத்து திட்டங்களையும் தானே செயல்படுத்தியாக மக்களிடம் பிரசாரம் செய்வார். நாட்டில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான ஸ்டாலின், மம்தா பானர்ஜி போன்றவர்கள், தங்கள் மாநில நலனுக்காக பிரதமரை பலமுறை சந்தித்து பேசியுள்ளனர். ஆனால், மாநில அந்தஸ்துக்காக ஒருமுறை கூட டில்லிக்கு சென்று பிரதமரை ரங்கசாமி சந்தித்தது இல்லை. புதுச்சேரிக்கு நிதியுதவி கேட்டோ, திட்டங்களை கேட்டோ பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்கவும் இல்லை. இருந்தபோதும், அனைத்து பழியையும் பா.ஜ., மீது போட்டுவிட்டு த.வெ.க.,வுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளார். இதுபோல கடைசி நேரத்தில் கழற்றி விடுவது ரங்கசாமிக்கு புதிது இல்லை. புதுச்சேரியில் தேர்தல் நேரத்தில் பெரும்பாலான பூத்துகளில் உட்காருவதற்கு கூட பா.ஜ.,வுக்கு ஆள் இல்லை. கூட்டணியில் இருந்து பா.ஜ.,வை என்.ஆர்.காங்., கை கழுவி விட்டால், புதுச்சேரியில் பா.ஜ., நடுரோட்டில் தான் நிற்கும். இது, புதுச்சேரி பா.ஜ., மேலிட பொறுப்பாளர்களுக்கு புரியவில்லை. இவ்வாறு, டில்லி பிரமுகர் கூறினார்.
கடைசி நேரத்தில் கழற்றி விடுவது புதிதல்ல...
என்ன செய்ய போகிறார்
சார்லஸ் மார்ட்டின்?
புதுச்சேரியில் விரைவில் தனிக் கட்சி துவக்கி, சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முடிவு செய்து பம்பரமாக சுழன்று வருகிறார். சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், பல்வேறு தொகுதிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை சந்தித்து அவரது அமைப்பில் ஐக்கியமாகி வருகின்றனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளை வாரி தந்தும், அன்னதானம் வழங்கியும் மக்களின் கவனத்தை கவர்ந்து வரும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளது. ஒன்று, என்.ஆர். காங்., - த.வெ.க., கூட்டணியில் சேருவது; இரண்டாவது, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் இணைவது. காங்., - தி.மு.க., கூட்டணியுடன் கைகோர்ப்பது மூன்றாவது வாய்ப்பாகும். இந்த மூன்றும் இல்லாவிட்டால், தனியாகவே களம் காண நேரிடும்.
பிள்ளையார் சுழி போட்ட ரங்கசாமி