வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சீக்கிரமாக செயல்படுத்தவும்
புதுச்சேரி:ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட சேவைகளுக்கு வரும் 18ம் தேதி முதல் பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 1,67,353 மஞ்சள் ரேஷன் கார்டுகள், 1,86,397 சிவப்பு ரேஷன் கார்டுகள் என, மொத்தம் 3,50,750 கார்டுகள் உள்ளன. பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு, புதிய ரேஷன் கார்டு தேவைக்காக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறையை பொதுமக்கள் நாடுகின்றனர். ஆனால், அத்துறை வளாகத்தில் அவ்வளவு சுலபத்தில் சேவைகள் கிடைப்பதில்லை. இது சட்டசபையிலும் எதிரொலித்தது. அப்போது, அமைச்சர் திருமுருகன் ரேஷன் அட்டை சேவைகள் பொது சேவை மையங்கள் மூலமாக விரிவுபடுத்தப்படும் என, அறிவித்தார். அதை தொடர்ந்து, தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. வரும் 18ம் தேதி முதல் இனி பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுகளில் முக்கிய சேவைகளை தங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் உள்ள பொது சேவை மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என, குடிமை பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. என்னன்ன சேவைகள் கிடைக்கும் குழந்தைகளின் (14 வயதுக்குட்பட்டோர்) பெயரைச் சேர்த்தல். பெரியோர் (14 வயதுக்கு மேற்பட்டோர்) பெயரைச் சேர்த்தல். ரேஷன் கார்டில் உறுப்பினர் பெயரை நீக்குதல். ரேஷன் கார்டு ஒப்படைத்தல். உறுப்பினர் பெயர் மாற்றம். குடியிருப்பு முகவரி மாற்றம். ஆதார் இணைப்பு. இ-ரேஷன் கார்டு பெறுதல். உறுப்பினர் விவரம் புதுப்பித்தல். பொது சேவை மைய ரேஷன் கார்டு சேவைகள் குறித்து குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குநர் சத்தியமூர்த்தி கூறியதாவது: இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம், தொலைதுாரப் பகுதிகளில் இருந்து வருவோர் இனி குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியம் இருக்காது. இந்த வசதி, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வயதானவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பொது சேவை மையங்கள் மூலம் ரேஷன்கார்டு சேவையை பெற முடியும். ரேஷன் கார்டு சேவையைப் பெறுவதை இது எளிதாக்குகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் https://pdsswo.py.gov.inஎன்ற ஆன்லைன் மூலமாகவோ அல்லது தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள பொது சேவை மையம் மூலமாகவோ இனி சமர்ப்பிக்கலாம்' என்றார். பொது சேவை மையங்கள் மூலமாக மட்டுமின்றி ரேஷன் கார்டு சேவைகளை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதிக்காக, குடிமை பொருள் வழங்கல் துறையில் மூன்று கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் வசதிக்காக, துறை வளாகத்திற்குள் ஒரு பொது சேவை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு ரேஷன் கார்டு சேவைகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீக்கிரமாக செயல்படுத்தவும்