ப்ரி-லெப்ட் மீடியன் இடைவெளி மீண்டும் திறப்பு; இந்திரா சிக்னலில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
புதுச்சேரி : இந்திரா சிக்னல் புதுச்சேரி மார்க்க ப்ரி லெப்ட் சாலையில், பெட்ரோல் பங்க் எதிரில், மீடியன் இடைவெளியை மூடி வைத்த பேரிகார்டுகள் ஆட்சியாளர் ஒருவரின் உத்தரவால் உடனடியாக அகற்றி, வாகனங்கள் குறுக்கில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி இந்திரா சிக்னலில் கடலுார் சாலை, விழுப்புரம் சாலை, திண்டிவனம் சாலை, நெல்லித்தோப்பு சாலை சந்திக்கும் முக்கிய இடம். இந்த சிக்னலில் கடந்த பல மாதங்களாக பழுதாகி கிடக்கும் டிராக்பிக் சிக்னல்கள் இதுவரை சரி செய்யப்படவில்லை. இந்த நிலையில், விழுப்புரம்-புதுச்சேரி மார்க்கத்தில், தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் கோரிமேடு செல்லும் ப்ரிலெப்ட் பாதை உள்ளது. ப்ரிலெப்ட் பாதையை பிரிக்க சிமெண்ட் கட்டையால் மீடியன் அமைக்கப்பட்டது. இதில், பெட்ரோல் பங்க் எதிரில் 20 அடி அகலத்திற்கு பொதுப்பணித்துறை இடைவெளி அமைத்து கொடுத்தது. சிக்னலில் விளக்குகள் பழுதாகி கிடப்பதால், தினமும் காலை, மாலை நேரங்களில் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள் 'ப்ரி-லெப்ட்' பாதை வழியாக சென்று, பெட்ரோல் பங்க் எதிரில் சென்டர் மீடியனில் உள்ள உள்ள இடைவெளி வழியாக குறுக்கே புகுந்து செல்கின்றன. இதனால், போக்குவரத்து விதிகளை பின்பற்றி வரிசையாக காத்திருக்கும் வாகனங்கள், சிக்னல் விழுந்ததும் செல்ல முடிவதில்லை. 'ப்ரி-லெப்ட்' மீடியன் இடைவெளியில் புகும் வாகனங்கள் எளிதாக சிக்னலை கடந்து விடுகிறது. சிக்னலில் சரியான பாதையில் நிற்கும் வாகனங்கள் அடுத்த சிக்னலில் மாட்டிக் கொள்கிறது. குறுக்கில் புகும் வாகனங்கள், ப்ரிலெப்ட் பாதையையும் சூழ்ந்து கொள்வதால் கோரிமேடு செல்ல வேண்டிய வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து வந்தது.இதனை சுட்டிக்காட்டி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் கடந்த 17ம் தேதி, பெட்ரோல் பங்க் எதிரில் 'ப்ரி-லெப்ட' பாதை மீடியனில் விடப்பட்ட இடைவெளியை பேரிகார்டுகள் மூலம் மூடினர்.அடுத்த ஓரிரு நாளில், ஆட்சி அதிகாரத்தில் உள்ள நபரிடம் இருந்து பறந்து வந்த உத்தரவை தொடர்ந்து, பெட்ரோல் பங்க் எதிரில் மீடியன் இடைவெளியை மூடி வைத்திருந்த பேரிகார்டுகளை போலீசாரே அகற்றினர்.தற்போது வழக்கம்போல் வாகனங்கள் 'ப்ரி-லெப்ட்' பாதை வழியாக வந்து, புதுச்சேரி மார்க்க சாலைக்குள் புகுந்து செல்கின்றன. இதனால், இந்திரா சிக்னலில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக மாறியுள்ளது.