பொறியியல் கல்லுாரியில் சேர அவகாசம் வழங்க கோரிக்கை
புதுச்சேரி : சென்டாக் மூலம் பொறியியல் கல்லுாரியில் இடம் கிடைத்த மாணவர்கள் கல்லுாரியில் சேர கால அவகாசம் வழங்க புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, கோரிக்கை வைத்துள்ளார். அவரது அறிக்கை: சென்டாக் மூலம் பொறியியல் படிப்புக்கு முதல் சுற்று முடிந்து அதில் இடம் கிடைத்தவர்கள் வரும் 28ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அந்தந்த கல்லுாரிகளில் சேர வேண்டும் என, சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் முதலாமாண்டு மாணவர்கள் சேரவில்லை. இதற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு கல்வி கட்டணம் அறிவிப்பு வெளியிடமால் உள்ளது. இதனால் மாணவர்கள் கல்வி கட்டணம் கட்ட வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையில் ஆதிதிராவிட மாணவர்கள் இலவச கல்வி திட்டத்தின் கீழ் கட்டணத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை செலுத்தும் என, சம்பந்தப்பட்ட துறை அறிவித்துள்ளது. வரும் 15ம் தே தி வரை பொறியியல் மாணவர்கள் சேர்க்கை முடித்து, முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்க வேண்டும் என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் சிறப்பு அனுமதி அளித்துள்ளது. ஆகையால், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் முதலாமாண்டு மாணவர் தொடக்க விழா அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடத்த வேண்டும். இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.