| ADDED : நவ 18, 2025 06:03 AM
புதுச்சேரி: பாண்கோஸ் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான சம்பளத்தை உடனே வழங்க அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாச்சலம் விடுத்துள்ள அறிக்கை: லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பணி புரியும் அரசு உதவி பெறும் நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 15 பேருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும், நிரந்தர ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதில் அமைச்சர் நேரடியாக தலையிட்டு, குறைக்கப்பட்ட ஊதிய விகிதத்தை சரி செய்யவும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான நிலுவை சம்பளத்தை உடனே வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப் பட்டுள்ளது.