புதுச்சேரி மாணவர்களின் பட்டியல் வெளியிட கோரிக்கை
புதுச்சேரி : நீட் தேர்வு முடிவுகளில் புதுச்சேரி மாணவர்களின் பட்டியலை மட்டும் வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா கவர்னர், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்;நீட் தேர்வினை புதுச்சேரி தேர்வு மையங்களில் வெளி மாநில மாணவர்களும் எழுதினர். எனவே தற்போது தேசிய தேர்வு முகமை வெளியிட உள்ள முடிவுகளில் இடம்பெற்றுள்ள பக்கத்து மாநில மாணவர்களை நீக்கி, புதுச்சேரி மாநிலத்தை இருப்பிடமாக கொண்டவர்களின் தரவரிசை பட்டியலை மட்டுமே வெளியிட வேண்டும். இதேபோல் புதுச்சேரி மாநில மாணவர்கள் பிற மாநில தேர்வு மையங்களிலும் தேர்வினை எழுதியுள்ளனர். அத்தகையவர்களின் பட்டியலையும் பெற்று தரவரிசை பட்டியலை தயாரிக்க வேண்டும்.அதேபோல வெளிநாடு வாழ் இந்தியருக்கான இடங்களுக்கு போலி ஆவணங்களை பெற்று விண்ணப்பித்துள்ள மாணவர்கள் மீது சென்டாக் புகாரின் அடிப்படையில் புதுச்சேரி காவல்துறையில் தொடரப்பட்ட வழக்கின் தன்மையையும், எடுக்கப்பட்ட நடடிக்கைகளையும் அரசும், சுகாதாரத்துறையும் வெளியிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.