கனமழையால் மூழ்கிய நெற்பயிர்கள்
திருக்கனுார்: கனமழை காரணமாக திருக்கனுார், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கள் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. கடந்த 2 தினங்களாக இரவு, பகலாக புதுச்சேரி நகர மற்றும் கிராம பகுதிகளில் கனமழை பெய்தது. பாகூர் பகுதியில் உள்ள 24 ஏரிகளில், மணப்பட்டு, உச்சிமேடு, பாகூர் சித்தேரி உள்ளிட்ட 10 ஏரிகள் நிரம்பியது. முக்கிய ஏரிகளான பாகூர, கிருமாம்பாக்கம், பரிக்கல்பட்டு உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன. கனமழை காரணமாக, விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலையொட்டி பாகூர், சேலியமேடு, பரிக்கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஏக்கரில் சம்பா பட்டத்திற்கு நடவு செய்த 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. திருக்கனுார் அடுத்த கைக்கிலப்பட்டு ஏரியி்ல மதகுகள் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதால் கனமழை காரணமாக ஏரியில் நிரம்பிய தண்ணீர் வெளியேற வழியின்றி அருகிலுள்ள விவசாய நிலங்களில் சூழ்ந்துள்ளது. இதனால், 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் கூறுகையில், 'சில மாதங்களுக்கு முன் பொதுப்பணித்துறை மூலம் ஏரி நீர்வரத்து வாய்க்கால் துார்வாரும் பணிமேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஏரியை துார்வாரி, மதகுகளை சரி செய்ய வலியுறுத்தினோம். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கனமழையால் ஏரி நிரம்பி, மதகுகள் வழியாக தண்ணீர்வெளியேற வழியின்றி விவசாய நிலத்தில் தேங்கி, நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன என்றனர். இதேபோன்று, வில்லியனுார், பத்துக்கண்ணு, நெட்டப்பாக்கம் உள்ளிட் பகுதிகளில் 200 ஏக்கர் அளவிற்கு நெல்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.