வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்படி பார்த்தால் அனைத்து ஊரிலும் தெரு விளக்கு எரிவதில்லைதான் பெரும்பாலும்?
புதுச்சேரி : நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு கிழக்கு கடற்கரை சாலை இருளில் மூழ்கி கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி கருவடிக்குப்பம் சிவாஜி சிலை முதல் முருகா தியேட்டர் வரையுள்ள கிழக்கு கடற்கரை சாலை (இ.சி.ஆர்.,) போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலையாக உள்ளது. சென்னையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு வருகின்றன.அதுபோல, புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு லாரி, வேன், கார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் 24 மணி நேரமும் ஓய்வின்றி சென்று வருகின்றன.இதன் காரணமாக, பகலில் மட்டுமல்லாமல், இரவிலும் இ.சி.ஆரில் போக்குவரத்து அதிகமாக இருக்கின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் இ.சி.ஆரில் கடந்த ஒரு மாதமாக மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கின்றது. குறிப்பாக, கருவடிக்குப்பம் சிவாஜி சிலை முதல் ராஜிவ் சிக்னல் வரை 4.3 கி.மீ.,தொலைவிற்கு இ.சி.ஆர்., இருள் சூழ்ந்து கும்மிருட்டாக கிடக்கிறது.கிழக்கு கடற்கரை சாலையில் நீண்ட துாரம் பயணித்த களைப்புடன், அதிவேகமாக வருகின்ற வாகனங்களின் ஓட்டுனர்கள், டூ வீலர்களில் வருபவர்களையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் இருட்டு காரணமாக சரியாக பார்க்க முடிவ தில்லை. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உதாரணமாக, ராஜிவ் சிக்னலில் உள்ள ைஹமாஸ் விளக்கு கடந்த இரண்டரை மாதமாக எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் கும்மிருட்டில் மூழ்கி கிடக்கின்றது. இதனால் முருகா தியேட்டரில் இருந்து பிரிலெப்டில் இ.சி.ஆரில் திரும்பும் வாகனங்கள், இருள் சூழ்ந்த பஸ்டாப்பில் பயணிகள் காத்திருப்பது தெரியாமல் மோதும் அபாயம் உள்ளது. இந்த இடத்தில் கொஞ்சம் வாகன ஓட்டிகள் கவனம் சிதறினாலும், பஸ்சுக்காக காத்திருக்கும் அப்பாவி பொதுமக்கள் கொத்து கொத்தாக விபத்தில் சிக்கி மடியும் அபாயம் உள்ளது. இதேபோன்று இ.சி.ஆரில் முக்கிய சந்திப்புகள் இருளில் மூழ்கி கிடப்பதால் விபத்து அபாயம் நீடிக்கின்றது.இ.சி.ஆர்., தான் வி.ஐ.பி.,க்களின் சாலையாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் சிக்காமல் சட்டசபைக்கு சென்று வர முதல்வர் ரங்கசாமி, மின் துறை அமைச்சர் இ.சி.ஆரை தான் பயன்படுத்தி வருகின்றனர். இ.சி.ஆரில் நிறைய திருமண மண்ட பங்கள் உள்ளன. இந்த திருமண மண்டப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இரவு நேரங்களிலும் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வந்து செல்லுகின்றனர்.இதேபோல், தலைமை செயலர், அரசு செயலர்கள் இந்த வழியாக தான் தங்களுடைய அலுவலங்களுக்கு தினமும் சென்று வருகின்றனர். அப்படி இருக்கும்போது இ.சி.ஆர் இருளில் மூழ்கி கிடப்பது ஒருவருக்கு கூட தெரியவில்லையா.... அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் வீட்டின் முன் இப்படி இருண்டு கிடந்தால் சும்மா இருப்பார்களா. மறுநாளே வெளிச்சம் வந்து விடாதா.ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் முக்கிய சாலையை, இருளில் மூழ்கி கிடப்பதை வேடிக்கை பார்ப்பதா....மக்களின் உயிருக்கு மதிப்பில்லையா.. என்ன தான் செய்கின்றனர் அதிகாரிகள் என்பதே பொதுமக்களின் மனக்குமுறலாகவும் கேள்வியாகவும் உள்ளது. பெரிய விபத்து ஏற்பட்டு விபரீதம் நடப்பதற்கு முன், இ.சி.ஆரில் உள்ள ைஹமாஸ், சென்டர் மீடியன் தெருவிளக்கை அனைத்தையும் எரிய செய்வதற்கு முதல்வர் ரங்கசாமி, மின் துறை அமைச்சர் நமச்சிவாயம், அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.போர்க்கால அடிப்படையில் இ.சி.ஆரில் விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோ ஓட்டுநர்கள் கூறும்போது, இ.சி.ஆரில் உள்ள தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது குறித்து பல முறை மின் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தாகிவிட்டது. ஆனாலும் அலட்சியமாக உள்ளனர். இ.சி.ஆரில் விளக்கு எரியாததை கண்டித்து மின்கம்பங்களுக்கு மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.
அப்படி பார்த்தால் அனைத்து ஊரிலும் தெரு விளக்கு எரிவதில்லைதான் பெரும்பாலும்?