கடல் அரிப்பை தடுக்க ரூ.1,000 கோடியில் திட்டம்
புதுச்சேரி:''புதுச்சேரியில் கடல் அரிப்பை தடுக்கும் திட்டம், 1,000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது'' என, அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவித்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, கடல் அரிப்பால் மீனவ கிராமங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறித்து எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது:புதுச்சேரியில் 24 கி.மீ., துாரம் உள்ள கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த, 1,000 கோடி ரூபாயில் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். காலாப்பட்டு உட்பட அனைத்து மீனவ கிராமங்களையும் சேர்த்து தான் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது.தேசிய வங்கி நிதி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அரசின் இரு துறைகள் அனுமதி வழங்கிவிட்டன. இன்னும் சில துறைகளின் அனுமதி கிடைக்க வேண்டும். அதன்பின் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.காரைக்கால் மீனவ கிராமங்களுக்கு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய, விரிவான திட்ட அறிக்கை தேவை. என்.சி.சி.ஆர்., திட்டத்தின் கீழ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திடம் இது குறித்து ஆலோசித்து செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.