புதுச்சேரி: புதுச்சேரியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்து, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் போதை வஸ்துக்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்தால், போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.அதன்படி, புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர்கள் கணேசன், கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் பெரிய மார்க்கெட் பகுதியில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கடலுார் ஆலப்பாக்கம், சிந்தாமணிகுப்பம், மதுரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த பெருமாள், 40; பாஸ்கர், 37, ஆகிய இருவரும் பெங்களூரில் இருந்து மொத்தமாக பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை வஸ்துக்களை வாங்கி வந்து புதுச்சேரியில் பல இடங்களில் விற்பனை செய்வது தெரிய வந்தது.இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து லாஸ்பேட்டை பகுதியில் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா 10 மூட்டைகளில் பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் இருவரிடம் இருந்து வாங்கி சென்று கிருமாம்பாக்கம் பகுதியில் விற்பனை செய்த, பாகூர் மதிகிருஷ்ணாபுரம், பெருமாள் நகரைச் சேர்ந்த அருண், 38, என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 1.6 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதைத் தொடர்ந்து, பெரியக்கடை பகுதியில் குட்கா விற்பனை செய்த சாந்தி நகர், மாரியம்மன் கோவில் வீதி ஜெய்சீலன், 42; கதிர்காமம், ஆனந்தா நகர், சுந்தரம் வீதி முத்தையன், 44, ஆகிய இருவரை கைது செய்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா 28 மூட்டைகளில் பறிமுதல் செய்யப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்கள் மதிப்பு ரூ. 20.6 லட்சம். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.