5 பேரிடம் ரூ.1.22 லட்சம் அபேஸ்
புதுச்சேரி : புதுச்சேரியில் 5 பேரிடம் ரூபாய் 1 லட்சத்து 22 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, கூனிமுடக்கு வி.எஸ்.எஸ்., கார்டன் பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர், ஆன்லைனில் வேலை தேடியபோது, தொடர்பு கொண்ட மர்மநபர், பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என, தெரிவித்தார். இதை நம்பி திருமுருகன் ஆன்லைன் வர்த்தகத்தில் 50 ஆயிரம் செலுத்தி, ஏமாந்தார்.வினோபா நகரை சேர்ந்த ரவிச்சந்திரனின் வங்கி கணக்கில் இருந்து 43 ஆயிரத்து 148 ரூபாயை மர்மநபர்கள் எடுத்துள்ளனர். அரியாங்குப்பம், ஸ்ரீராம் நகரை சேர்ந்த மணிக்கம் என்பவர், பேஸ்புக்கில் நண்பர் பேரில் வந்த மருத்துவ அவசரம் என்ற போலி செய்தியை பார்த்து, 16 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.ஞானபிரகாசம் நகரை சேர்ந்த பெனடிக்ட் ஹாரிசன் 7 ஆயிரத்து 500, ஏனாம் பகுதியை சேர்ந்த மோகனராவ் 4 ஆயிரத்து 900 ரூபாய் என, 5 பேர் மொத்தம் 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை இழந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.