கட்டுமான துறையில் பாதுகாப்பு கருத்தரங்கு
புதுச்சேரி: இந்திய பொறியாளர்கள் புதுச்சேரி மாநில நடுவம் சார்பில் கட்டுமான துறையில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. பொதுப்பணித்துறை கலந்தாய்வு கூடத்தில் நடந்த கருத்தரங்கில், பாதுகாப்பு மற்றும் தரம் குழுமம் தலைவர் சிங்கள், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து விளக்கி பேசினர். இந்திய பொறியாளர்கள் புதுச்சேரி மாநில நடுவத்தின் தலைவர் திருஞானம் 'கட்டுமான துறையில் கடைபிடிக்க வேண்டிய சில ஆலோசனைகள்', புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் கோதண்டராமன் 'தரம் மற்றும் பாதுகாப்பு', மின்துறை முன்னாள் செயற்பொறியாளர் சண்முகவடிவேலு 'மின்சார பாதுகாப்பு முறைகள்' தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினர். பொறியாளர் குமார் நன்றி கூறினார். இதில், பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.