உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராவணனுக்கு சீதா பிராட்டி சொன்ன சனாதன தர்மம் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

ராவணனுக்கு சீதா பிராட்டி சொன்ன சனாதன தர்மம் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

புதுச்சேரி: பாவம் பண்ணியிருந்தாலும், நாம் பகவானைச் சேர்ந்தவர்கள் என்றுணர்ந்து அவனைச் சரணடையும் பக்குவம் பெற்றால், பகவான் ஏற்றுக் கொள்வான் என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் செய்தார். முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கடந்த 3ம் தேதி முதல் ஸ்ரீமத் ராமாயண நவாக உபன்யாசம் நடந்து வருகின்றது. நேற்றைய ஐந்தாம் நாள் உபன்யாசத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் சொற்பொழிவாற்றியதாவது: ராவணன் வந்து நின்றதும் சீதாப்பிராட்டி இந்த நீசன் முன் இருக்கிற நிலையில் உள்ளேனே என்று கூசிக் குறுகினாள். இது வரை பொறுமை காத்த தேவி, இனி பொறுப்பதில்லை என்று முடிவெடுத்தாள். பதிவ்விரதா தர்மத்தின் சொரூபிணி அல்லவா அவள். பேச வேண்டிய நிர்ப்பந்தம் வந்தவுடன், ஒரு புல்லைக் கிள்ளி இடையில் போட்டாள்.அந்நிய புருஷனுக்கும் தனக்கும் இடையில் ஒரு திரை போல் புல்லைக் கிள்ளிப் போட்டாள். இந்தப் புல் என்னும் ரக்ஷயைத் தாண்டி நீ பிரவேசிக்க முடியாது என்று உணர்த்தினாள்.ராவணனை பார்த்ததும் சீதாவின் வார்த்தைகளில் அனல் வீசியது. உன்னை இந்த நொடியிலேயே போசுக்கிவிடுவேன். என் ராமன் வர மாட்டார் என்று கொக்கரிக்கிறாயே மூடனே. திருந்திவிடு. ராமனிடமிருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது என்பதைத் தெரிந்து கொள்.உனக்குக் கோரமான அழிவு வேண்டாம் என்று நினைத்தால், உன் இலங்கையை காக்கவேண்டும் என நினைத்தால், என் ராமனிடம் நட்பு கொண்டு பிழைத்துக் கொள் என்று கூறினாள். ஏன் நண்பனாகப் போய்விடு என்று பிராட்டி சொன்னாள் என்று பலருக்கும் தோன்றலாம். எதிரியே ஆனாலும், ராவணன் ஒரு ராஜன். ஒரு ராஜன் மற்றொரு ராஜனிடம் நட்பாக இருத்தாலே ராஜ தர்மம் என்று உணர்த்தினாள் பிராட்டி.என் சுவாமியிடம் சரணாகதியடைந்து உயிர் பிழைத்துக் கொள். என் பிரபு உன்னை மன்னிப்பார். என் பிரபு தர்மம் தெரிந்தவர். எதிரியே ஆனாலும், அவன் எத்துனை தவறுகள் செய்தாலும் சரணடைந்தால் மன்னித்து அபயம் அளிப்பார் எனக் கூறினாள்.பகவானிடம் நாம் சரணாகதியடைந்தாலும் , கடலில் போட்ட துரும்பை அலைகள் ஒதுக்குவது போன்று, கடலில் வாழும் திமிங்கலங்கள் போன்ற கடல் விலங்குகள் கடலிலேயே உள்ளனவே அவை ஏன் அலைகளால் வெளியேற்றப் படவில்லை. இதற்கு காரணம்துரும்பு தான் கடலைச் சேர்ந்தது அல்ல என்று நினைப்பதால் வெளியேற்றப்படுகிறது. ஆனால் கடல் பிராணிகள் தாம் கடலுக்குள் அடக்கம் என்றிருப்பதால் அவை கடலிலேயே உள்ளன. எண்ணத்தில் தான் வித்தியாசம். ஆகவே நாம் என்ன பாவம் பண்ணியிருந்தாலும், நாம் பகவானைச் சேர்ந்தவர்கள் என்றுணர்ந்து அவனைச் சரணடையும் பக்குவம் பெற்றால், பகவான் ஏற்றுக் கொள்வான். சீதா பிராட்டி ராவணனுக்குச் சொன்ன இந்த உபதேசம் சனாதன தர்மத்தை விளக்குவதாக உள்ளது. இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

உபன்யாசம் நேரம் முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் வரும் 11ம் தேதிவரை தொடர்ந்து உபன்யாசம் நடக்கின்றது. ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் தினமும் மாலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை உபன்யாசம் செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை