புதிதாக 10 ஆயிரம் முதியோருக்கு உதவித் தொகை; தீபாவளிக்கு வழங்க கவர்னர் அனுமதி
புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை சார்பில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், முதிர் கன்னிகள் என பல்வேறு பிரிவுகளில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 616 பேருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் முதியோர் உதவித் தொகை பெற்று வருகின்றனர். முதல்வர் ரங்கசாமி, கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தால் முதியோர் உதவித் தொகையை உயர்த்தப்படும். மேலும், புதிதாக தகுதி பெற்ற முதியோர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்றார். அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் முதியோர் உதவித் தொகையை ரூ.500 உயர்த்தினார். அதன்படி தற்போது 55 முதல் 70 வயதிற்கு உட்பட்டோர் ரூ.2,000; 71 வயது முதல் 80 வயதிற்கு உட்பட்டோர் ரூ.2,500; 81 முதல் 90 வயதிற்கு உட்பட்டோருக்கு ரூ.3,000; 91 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3,500 மாதந்தோறும் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில், புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிகளில் உதவித் தொகை பெறாத, தகுதியுள்ள முதியோர்களிடம் விண்ணப்பங்கள் பெற்றனர். இந்த மனுக்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அதிகாரிகளால் ஆய்வு செய்து, தொகுதிக்கு 300 பேர் வீதம் 30 தொகுதிகளுக்கு 9,000 பேரும், 2 எம்.பி.,க்கள் மற்றும் 3 நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 200 வீதம் மொத்தம் 1,000 பேர் தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான கோப்பு தலைமை செயலர் மற்றும் நிதித்துறை செயலர் அனுமதி பெற்று, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோப்பை ஏற்ற கவர்னர், புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வரும் அக்டோபர் மாதம் முதல் வழங்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதன் மூலம் அரசுக்கு மாதத்திற்கு ரூ. 2 கோடி வீதம் ஆண்டிற்கு ரூ.24 கோடி கூடுதல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.