பள்ளியை திறக்க வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புதுச்சேரி: ஆட்டுப்பட்டி அரசு ஆரம்ப பள்ளியை மீண்டும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர முன்னாள் எம்.எல்.ஏ., மனோகர் கல்வித்துறைக்கு வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி உப்பளம் தொகுதியில் உள்ள ஆட்டுப்பட்டி டாக்டர் அம்பேத்கர் நகரில், கல்வித்துறையின் கீழ் பல ஆண்டுகளாக அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வந்தது. இந்தப் பள்ளியில் பெரும்பாலும் ஏழை மாணவர்கள், குறிப்பாக ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வந்தனர். நான் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, அப்பள்ளிக்கு மதில்சுவர் அமைக்க செய்தேன். அதன் பின் மாணவர்கள் பாதுகாப்பாக கல்வி கற்றனர். கடந்த ஆட்சி காலத்தில் இப்பள்ளி மூடப்பட்டது. ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் நோக்கத்தில் இயங்கிய இந்த அரசு பள்ளியை ஏன் மூடினர் என்பது குறித்து புதுச்சேரி அரசின் கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும். ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள இந்த அரசு ஆரம்ப பள்ளியை புதுப்பித்து, புதிய கட்டடத்துடன் மீண்டும் திறக்க வேண்டும்.