உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீர்வீழ்ச்சியில் குளித்த பள்ளி மாணவர் பலி

நீர்வீழ்ச்சியில் குளித்த பள்ளி மாணவர் பலி

கச்சிராயபாளையம் : கல்வராயன் மலையில் நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளித்த பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.கல்வராயன் மலையில் உள்ள கொட்டபுத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் கலையரசன், 17; இவர் இன்னாடு அரசு மலைவாழ் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அரையாண்டு விடுமுறைக்கு வீட்டிற்கு சென்ற கலையரசன், கடந்த 27ம் தேதி தனது நண்பர்கள் மூன்று பேருடன் சிறுகலுார் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளார்.அப்போது கலையரசன் பாறை மீதிருந்து தலைகீழாக தண்ணீரில் குதித்தவர் மீண்டும் வெளியே வரவில்லை. இதனால் அச்சம் அடைந்த அவரது நண்பர்கள் யாரிடமும் கூறாமல் ஊருக்கு சென்று விட்டனர். மகன் 2 நாட்களாக வீட்டிற்கு வராததால், உடன் சென்ற நண்பர்களிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர்.அவர்கள் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் கரியாலுார் போலீசார் சிறுகலூர் பகுதி பொதுமக்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.அதில், பாறை இடுக்கில் சிக்கியிருந்த கலையரசனின் உடலை நேற்று முன்தினம் மாலை 6.00 மணி அளவில் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி