சென்டாக் ஆன்லைன் விண்ணப்பம்... எப்போது; ஆயத்த பணிகள் துவக்கம்
புதுச்சேரி: ஆன்லைனில் விண்ணப்பங்களை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை சென்டாக் வேகப்படுத்தி வருகிறது. இம்மாதம் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் விண்ணப்பங்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் கல்லுாரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, சென்டாக் அமைப்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. விண்ணப்பம் வினியோகம் மட்டுமின்றி கவுன்சிலிங்கும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டு ஆன்-லைனில் விண்ணப்பங்களை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை அரசு வேகப்படுத்தி வருகிறது. இம்மாதம் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் நான் நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பங்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. சென்டாக் தகவல் குறிப்பேட்டிற்காக அனைத்து கல்லுாரிகளிடமிருந்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. எவ்வளவு சீட்
மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மொத்தம் இளநிலை, முதுநிலை படிப்புகளில் மொத்தம் 12,201 சீட்டுகள் சென்டாக் மூலம் ஆண்டுதோறும் நிரப்பப்படுகின்றன. இதில் கடந்தாண்டு 9172 சீட்டுகள் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டன. இந்த இடங்களுக்கு மொத்தம் 23,152 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்தாண்டு முழுவதுமாக இடங்களை நிரப்ப சென்டாக் திட்டமிட்டு பணிகளை வேகப்படுத்தி வருகின்றன. விண்ணப்ப கட்டணம்
சென்டாக் மூலம் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்பட்டுள்ளது. எனவே இந்த விண்ணப்ப கட்டண ரத்து திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ஒப்புதல் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் போலி சான்றிதழ் மோசடி தலைதுாக்கும். கடந்தாண்டு என்.ஆர்.ஐ., மோசடி விவகாரம் பூதாகரமானது. எனவே என்.ஆர்.ஐ., விண்ணப்பங்களை முழுவதுமாக ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளது. தகவல் குறிப்பேடு
ஒவ்வொரு படிப்பிற்கும் கவுன்சிலிங் வழிகாட்டி நெறிமுறைகளை தகவல் குறிப்பேடு சென்டாக் வெளியிட்டு வருகிறது. ஆனால் அவை ஆங்கிலத்தில் வெளியிட்டு இருந்ததால் கிராமப்புற மாணவர்களிடம் போய் சேரவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிராந்திய மொழிகளில் வெளியிட்டு இருந்தால் குறைந்தபட்சம் கவுன்சிலிங் நடைமுறைகளை மாணவர்கள் எளிதாக புரிந்து கொண்டு அணுக முடியும்.இதனை செய்ய ஆண்டுதோறும் சென்டாக் தவறி வருகிறது. இது கடைசி வரைக்கும் கவுன்சிலிங் நடைமுறையில் எதிரொலித்து வருகிறது. வெப்சைட்
இதேபோல் சென்டாக் கவுன்சிலிங் வெப்சைட்டும் தகவல்களும் பிராந்திய மொழிகளில் இல்லை. முழுமுழுக்க ஆங்கிலத்திலேயே அனைத்து தகவல்களும் இடம் பெறுவதால் கிராமப்புற மாணவர்கள் கண்ணை கட்டி காட்டில் விட்டதைபோன்று பரிதவித்து வருகின்றனர். மாணவர்கள் ஆன் லைனில் பணம் கட்டுவது எப்படி, சீட் கிடைத்த கல்லுாரியில் ஆன்லைன் வழியாக எப்படி தகவல் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கூட பிராந்தி்ய மொழிகளில் இடம் பெறுவதில்லை. அப்டேட்
ஒவ்வொரு சுற்று கவுன்சிலிங் முடிந்த பிறகும் கோர்ஸ் அப்டேட் கொடுக்க வேண்டும். அப்டேட் கொடுத்தால் மட்டுமே புதிய சுற்று கவுன்சிலிங்கில் மாணவர்களால் பங்கேற்க முடியும். கோர்ஸ் இந்த அப்டேட் நடைமுறையை அனைவருக்கும் புரியும் விதத்தில் பிராந்திய மொழிகளில் வெளியிடப்படவில்லை.இதன் காரணமாக பாடப்பிரிவுகளுக்கு அப்டேட் கொடுக்க தெரியாமல் கடைசி நேரத்தில் மாணவ மாணவிகள் சென்டாக்கிடம் கெஞ்சி வருகின்றனர். இந்த தகவல்களை பிராந்திய மொழிகளில் வெளியிட வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.