உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் தொடர் செயின் பறிப்பு சம்பவம் மகாராஷ்டிர மாநில வறிப்பறி கொள்ளையன் கைது

புதுச்சேரியில் தொடர் செயின் பறிப்பு சம்பவம் மகாராஷ்டிர மாநில வறிப்பறி கொள்ளையன் கைது

புதுச்சேரி:புதுச்சேரியில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட, மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளைன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, முதலியார்பேட்டை பூந்தோட்ட வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி கலைவாணி, 50; இவர், அக்.,2ம் தேதி இரவு வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது, பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த ஆசாமி, கலைவாணி கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றார். அடுத்த சில நிமிடங்களில், ஜான்பால் நகரில் நடந்து சென்ற ஞானசேகரன் மனைவி தனபாக்கியம், 54; கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார். மறுநாள் (3ம் தேதி) மூலக்குளம் ஜே.ஜே.நகரில் நடந்து சென்ற சசிரேகா,30; கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை, பைக்கில் ெஹல்மெட் அணிந்த மர்ம நபர் பறித்து சென்றார். இந்த சம்பவங்கள் குறித்து முதலியார்பேட்டை மற்றும் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், வழிப்பறி ஆசாமிகளை பிடிக்க, சீனியர் எஸ்.பி., கலைவாணன் உத்தரவின்பேரில், எஸ்.பி.,க்கள் ரகுநாயகம், செல்வம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், கணேஷ், முத்துக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சம்பவ இடங்களில் சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், மூன்று இடங்களிலும் ஒரே நபரே, பி.ஒய்-01-சிடி-6689 பதிவெண் கொண்ட பைக்கில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த பைக் புதுச்சேரி ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் நிறுத்தியிருப்பதை கண்டுபிடித்த போலீசார், அந்த பைக்கை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, அந்த பைக்கை எடுத்த நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர், மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி, யஷ்வந்த் நகர் பாலாஷாஹீப் மகன் அமோல், 33; என்பதும், தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 30க்கு மேற்பட்ட பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர், தமிழக வழக்கில், புழல் சிறையில் அடைக்கப்பட்டு, அக்., 20ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதும் தெரியவந்தது. இவர், சென்னை கொடுங்கையூரில் உள்ள தனது நண்பர் சலீம் மகன் ஷாகுல் ஹமீது, 36; என்பவரிடம் பைக் வாங்கிக் கொண்டு, புதுச்சேரிக்கு வந்து, பஸ் நிலையம் அருகே உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். தினசரி பைக்கில் நகரில் வலம் வந்த அவர், அக்., 2ம் தேதி முதலியார்பேட்டையில் இரு பெண்களிடமும், ரெட்டியார்பாளையத்தில் ஒரு பெண்ணிடமும் செயினை பறித்துள்ளார். பின்னர், பைக்கை ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு, சென்னை சென்று நகைகளை, வியாசர்பாடியில் அடகு கடை நடத்தி வரும் மூர்த்தி,52; என்பவரிடம் விற்றதும், மீண்டும் புதுச்சேரியில் செயின் பறிக்கு வந்தபோது, போலீசில் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. அதன்பேரில், அவரை கைது செய்த போலீசார், அமோலுக்கு உதவிய அவரது நண்பர் ஷாகுல் அமீது மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 23 கிராம் எடையுள்ள உறுக்கிய நிலையில் தங்க கட்டி, 3 அலைபேசிகள், ரூ.55 ஆயிரம் ரொக்கம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். மூவரும் நேற்று புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.எஸ்.பி., பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி