துணி துவைக்கும் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்
புதுச்சேரி : சாலை குண்டும், குழியுமாகவும், குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதை கண்டித்து, சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தராஜன் துணி துவைக்கும் போராட்டம் நடத்தியால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி கொக்குபார்கில் இருந்து தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அங்கு அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையில், சாலையில் குளம் போல், மழைநீர் தேங்கி நின்றது. அதனை கண்டித்து, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அலுவலகம் அருகில் சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தரராஜன் சாலையில் அமர்ந்து நேற்று போராட்டம் நடத்தினார். சாலையில் குளம் போல நின்ற மழைநீரில், தனது ஆடைகளை கழற்றி துணிகளை துவைத்து போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.