உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சபாநாயகர், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கவர்னருடன் திடீர் சந்திப்பு புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு

சபாநாயகர், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கவர்னருடன் திடீர் சந்திப்பு புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு

கவர்னரை சபாநாயகர், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து சந்தித்து பேசியதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கு பின் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் தோல்விக்கு முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., அமைச்சர்கள் அணுகுமுறை காரணம் என, தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.இப்படியே, போனால் வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி தான் ஏற்படும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு செயலாளர் சந்தோஷ், மத்திய அமைச்சர்கள் மெக்வால், கிஷன் ரெட்டி ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். இப்போது பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அமைதி காத்து வரும் சூழ்நிலையில் நேற்று மதியம் 1:00 மணியளவில் ராஜ்நிவாசில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், சிவசங்கர், ரிச்சர்டு ஆகியோர் சந்தித்து பேசினர். 1:30 மணி வரை இந்த சந்திப்பு நீடித்தது.சந்திப்பு குறித்த சிவசங்கர் எம்.எல்.ஏ., கூறுகையில், 'புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்கள் கிடப்பில் உள்ளது. இவற்றை செயல்படுத்த வேண்டும் என, கவர்னரிடம் வலியுறுத்தினோம். கனமழை புயலால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் பிசினஸ் ஆரம்பிக்க 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும். குறைந்த வட்டியில் கடனுதவி அளிக்க வேண்டும். சொத்து வரியில் இருந்து 7 மாதம் வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். வியாபாரிகளின் பாதிப்பினை சர்வே செய்து, 50 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். வியாபாரிகளின் ஜி.எஸ்.டி., உச்சவரம்பினை ரூ.40 லட்சமாக உயர்த்த வேண்டும் என, வலியுறுத்தி மனு அளித்தோம் என்றார்.தொடர்ந்து 2:00 மணிக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ.,வும் அதை தொடர்ந்து சபாநாயகர் செல்வம் ஆகியோர் தனித்தனியே கவர்னரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பினால் ராஜ்நிவாசில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சபாநாயகருக்கு எதிர்ப்பா?

சபாநாயகர் செல்வம் கூறுகையில், 'தினமும் கவர்னரை சந்தித்து பேசுகிறேன். அதன்படி இது வழக்கமான சந்திப்பு தான்' என்றார்.அசோக்பாபு எம்.எல்.ஏ., கூறுகையில், 'இரண்டு நாட்கள் ஊரில் இல்லை. எனவே முன்கூட்டியே புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். சபாநாயகருக்கு எதிராக நாங்கள் இல்லை. ஒற்றுமையாக தான் உள்ளோம். ஜான்குமார் எம்.எல்.ஏ., முதலியார்பேட்டை தொகுதியில் நிற்பது குறித்து கூறியது அது அவருடைய கருத்து. கட்சி தான் யார் நிற்பது என்பது குறித்து முடிவு செய்யும்' என்றார்.ஜான்குமார் எம்.எல்.ஏ., கூறுகையில், 'நாங்கள் இருக்கிற வரைக்கும் சபாநாயகரை யாரும் அசைக்க முடியாது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ