உரிமை கோராத நிதிகளை மீட்டெடுக்கும் சிறப்பு முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநில வங்கியாளர் குழுமம் சார்பில் உரிமை கோரப்படாத நிதிகளை மீட்டெடுக்கும் சிறப்பு முகாம் நடந்தது. புதுச்சேரி வங்கிகளில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப் புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் உள்ளன. இவற்றை உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு ஒப்படைக்கும் முகாம், புதுச்சேரி மாநில வங்கியாளர் குழுமம் சார்பில் கோரிமேடு, இந்திரா நகர் காவலர் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் பங்கேற்று, பயனாளிகளுக்கு நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகையை வழங்கினார். புதுச்சேரி மாநில வங்கியாளர் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்ரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த முகாம் மத்திய நிதி அமைச்சக வழிகாட்டுதலின்படி அனைத்து வங்கி, காப்பீடு மற்றும் இதர துறை சார்ந்த அலுவலக கிளைகளில் டிசம்பர் 31ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த முகாம் மூலம் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி கணக்குகள், நிலுவையில் உள்ள வைப்பு தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குகள், மற்றும் பிற நிதி சொத்துக்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. அத்துடன் உரிமையாளர்கள் அல்லது அவர்களது சட்ட வாரிசுகளுக்கு தங்களது உரிமை கோரப்படாத நிதிகளை மீட்கவும் வழிகாட்டுகின்றது. மீட்பது எப்படி வங்கியில் தொடர்ந்து பத்து ஆண்டிற்கு மேல் செயல்படாத கணக்குகளில் மற்றும் பணம் கோரப்படாத வைப்புத்தொகை இருந்தால் ஆர்.பி.ஐ.,யின் டி.இ.ஏ.எப்., - கணக்கிற்கு மாற்றப்படுகிறது. இதன் விவரங்களை (https://udgam.rbi.org.in) என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ள முடியும். வங்கி கணக்கு வைத்து உள்ளவர்கள் அல்லது உங்கள் சட்டப்பூர்வ வாரிசுகளோ, எந்த நேரத்திலும் அந்த நிதியை உரிமை கோரிப் பெறலாம். முகாமில் வங்கித்துறை, காப்பீட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.