போர் தளவாடங்கள் உற்பத்தி புதுச்சேரியில் மாநில மாநாடு
புதுச்சேரி: தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் போர் தளவாடங்கள் உற்பத்தியில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு என்ற தலைப்பில் மாநில அளவிலான மாநாடு இன்று (நவ.,23) நடந்தது. மத்திய பாதுகாப்பு துறையின் போர் தளவாடங்கள் உற்பத்தி பிரிவு, பாரத் சேம்பர் ஆப் காமர்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், கடற்படை தரக்கட்டுப்பாட்டுமையம், புதுச்சேரி தொழில் முனைவோர் வளர்ச்சி சங்கம் இணைந்து தற்சார்பு இந்தியா திட்டத்தில் ‘போர் தளவாடங்கள் உற்பத்தியில் சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில், எம்.எஸ்.எம்.இ., மாநில மாநாடு அக்கார்டு ஓட்டலில் இன்று நடந்தது. பாரத் வணிக அவையின் பொதுச் செயலர் கேகா சர்மா வரவேற்றார். கவர்னர் கைலாஷ்நாதன் மாநாட்டை துவக்கி வைத்தார். போர்த் தளவாடங்கள் உற்பத்தி துறை துணை தலைமை இயக்குனர் அமியாகுமார்தாஸ், நோக்கவுரையாற்றினார். பாரத் எலக்ட்ரானிக்ஸ் சென்னை பிரிவின் பொது மேலாளர் ஜெகதீஷ்குமார் சிறுகுறுதொழில்துறையில் பாதுகாப்பு உபகரணங்களின் வாயப்புகள் குறித்து பேசினார். சென்னை கடற்படை தரக்கட்டுபாட்டு மையத்தின் தர கட்டுபாட்டு அதிகாரி கேப்டன் நாயர் தரமான உற்பத்தி குறித்து பேசினார். மத்திய பாதுகாப்பு துறை இயக்குனர் நரேந்திரசிங், தொழில்துறை செயலர் விக்ராந்த்ராஜா, பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் சீனியர் துணைபொதுமேலாளர் சாமிநாதன், மத்திய சிறு குறு மத்திய அமைச்சக இணை இயக்குனர் தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வணிக அவை தலைவர் குணசேகரன் நன்றி கூறினார்.