உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழுப்புரம் தனியார் பள்ளியில் மயங்கி விழுந்து மாணவர் சாவு

விழுப்புரம் தனியார் பள்ளியில் மயங்கி விழுந்து மாணவர் சாவு

விழுப்புரம் : விழுப்புரம், மேல் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் மோகன்ராஜ்,16; விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். தந்தை இறந்துவிட்ட நிலையில், தாய் மகேஸ்வரி பராமரிப்பில் இருந்து வந்தார். பள்ளியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடப்பதால், மோகன்ராஜ் நேற்று காலை 7:00 மணிக்கு பள்ளிக்கு வந்தார். வகுப்பறையில் உட்கார்ந்ததும் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் முதலுதவி அளித்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மோகன்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவரின் உடல், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால், உடனே பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பள்ளிக்கு வரும்போதே மாணவர் சோர்வாக வந்து, வகுப்பறையில் உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து, மாணவரின் தாய் மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நன்கு படிக்கக்கூடிய அந்த மாணவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 462 மதிப்பெண் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை