உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துணைவேந்தர், பதிவாளர் சிறை பிடிப்பு மாணவர்கள் போராட்டத்தால் பல்கலையில் பரபரப்பு

துணைவேந்தர், பதிவாளர் சிறை பிடிப்பு மாணவர்கள் போராட்டத்தால் பல்கலையில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் மற்றும் பதிவாளரை சிறை பிடித்து மாணவர்கள் நள்ளிரவிலும் தொடர்ந்த போராட்டத்தால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரியில் பல்கலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அண்மை காலமாக பல்கலையில் பல்வேறு பாலியல் தொந்தரவுகள் நடப்பதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் உலா வருகிறது. சமீபத்தில் கூட காரைக்காலில் உள்ள பல்கலையில் நடந்த அத்துமீறல் குறித்து மாணவியின் ஆடியோ வைரலானது. இப்புகாரை பல்கலை நிர்வாகம் மறுத்து அறிவிப்பு வெளியிட்டது. அதில் ஆத்திரமடைந்த பல்கலை மாணவர்கள் நேற்று மதியம் 2.30 மணியளவில் பல்கலை நிர்வாக கட்டடத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, கலைந்து சென்றால், துணைவேந்தர் பேச்சுவார்த்தை நடத்துவார் என கல்லுாரி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில் ஆவேசமடைந்த மாணவர்கள், பல்கலையின் நிர்வாக கட்டடடத்தின் 5 நுழைவு வாயில்களை இழுத்து மூடி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் துணைவேந்தர் பிரகாஷ்பாபு, பதிவாளர் ராஜ்னீஷ் புட்டானி வெளியேற முடியாமல் உள்ளே சிக்கினர். அதே வேளையில் நிர்வாக கட்டடத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களை வெளியேற மாணவர்கள் தடங்கல் செய்யவில்லை. மதியம் 2.30 மணிக்கு துவங்கிய இப்போராட்டம் இரவு 10 மணிக்கு மேலும் நீடித்ததால் பரபரப்பு நிலவியது. போராட்டம் குறித்து மாணவர்கள் கூறுகையில், 'பல்கலையில் தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் வருகிறது. அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் உள் விசாரணை குழு காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், தைரியமாக புகார் கொடுக்கும் மாணவிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. பல்கலை., மானிய குழு விதிமுறைப்படி உள் விசாரணை குழுவில் மூன்று மாணவர்கள் இடம் பெற வேண்டும். ஆனால் பல்கலை., உள் விசாரணை குழுவில் மாணவர்கள் இடம் பெறவில்லை. இதனால், வெளிப்படை தன்மை இல்லாமல் விசாரணை மர்மமாகவே நடத்தி முடிக்கப்படுகிறது. எங்களுக்கும் இக்குழு மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளது. இவ்விவகாரத்தில், துணை வேந்தர் எந்த உறுதியும் கொடுக்கவில்லை. உள் விசாரணை குழுவில் மாணவர்களை இடம் பெறச் செய்து மாற்றி அமைக்கும் வரை இந்த விசாரணை குழுவை முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டும். பிரச்னை தீர்வு கிடைக்கும் வரை எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை