போக்குவரத்து சிக்னல்களுக்கு ஒலிபெருக்கி அமைப்பு வழங்கல்
புதுச்சேரி: யாக்டோ பவுண்டேஷன் சார்பில், புதுச்சேரியில் உள்ள 5 முக்கிய போக்குவரத்து சிக்னல்களுக்கு ஒலிபெருக்கி அமைப்புகள் வழங்கப்பட்டது. பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தவும், யாக்டோ பவுண்டேஷன் சார்பில் ஒதியஞ்சாலை சிக்னல், ராஜா தியேட்டர் சிக்னல், அஜந்தா சிக்னல், முருகா தியேட்டர் சிக்னல் மற்றும் இந்திரா காந்தி சிக்னல் என, 5 முக்கிய இடங்களில் ஒலிபெருக்கி அமைப்புகள் அமைக்கப்பட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் திவ்யா, ரச்சனா சிங் ஆகியோர் கலந்து கொண்டு ஒலி பெருக்கி அமைப்புகளை இயக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பவுண்டேஷன் நிறுவனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஒலிபெருக்கி அமைப்புகள் மூலம் போக்குவரத்து விதிமுறைகள், சாலைப் பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் அவசியம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் போக்குவரத்து சட்டங்களை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஒலிப்பதிவுகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து ஒலிபரப்பப்படும்.