உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்... கிடுக்கிபிடி; இனி உரிமம் பெற்று வளர்த்தால்தான் நிம்மதி

தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்... கிடுக்கிபிடி; இனி உரிமம் பெற்று வளர்த்தால்தான் நிம்மதி

புதுச்சேரி : தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கிடுக்கிபிடி உத்தரவிட்டுள்ள நிலையில், புதுச்சேரி நகராட்சி விதிமுறைகளைதெரிந்து கொண்டு, உரிமம் பெற்று வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்க்க வேண்டும். தெருநாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் முக்கியமான உத்தரவைப் நேற்று பிறப்பித்திருக்கிறது. ஆக்ரோஷமாக இல்லாத நாய்களைக் கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட உத்தரவிட்டுள்ளது. தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்கத் தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட், பிரத்தியேகமாக உணவளிக்கும் இடங்களை உடனடியாக உருவாக்க உள்ளூர் நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறது. தெரு நாய்கள் மட்டுமின்றி, புதுச்சேரியில் வீடுகளிலும் நாய்கள் வளர்ப்பது அண்மை காலமாக அதிகரித்துள்ளது. அவர்களும் புதுச்சேரி நகராட்சி விதிமுறைகள் ஏதும் தெரியாமல் நாய்களை வளர்த்து வீதிகளில் சுற்றி திரிய விடுகின்றனர். இதனால், தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இனி, இது போன்று உரிமம் பெறாமல் வளர்ப்பு நாய்களை வளர்ந்த பிறகு தெருநாய்களாக திரியவிட்டால் அவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்க புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே நாய்கள் வளர்ப்போர்கள் இந்த விஷயத்தில் இனி உஷாராக இருக்க வேண்டும். லைசென்ஸ் முக்கியம் உங்க வீடுகளில் எலியை வளர்த்தாலும் சரி, யானையை வளர்த்தாலும் சரி கட்டாயம் புதுச்சேரி நகராட்சியிடம் உரிமம் பெறுவது முக்கியம். எனவே நாய் வளர்ப்பவர்கள் கட்டாயம் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சியை அணுகி லைசென்ஸ் பெற வேண்டும். இதற்காக புதன்கிழமை தோறும் புதுச்சேரி கால்நடை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கான சிறப்பு உரிமம் வழங்கும் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமிற்கு செல்லப்பிராணிகளுடன் சென்று உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். பெயர், முகவரி, உரிமையாளர் புகைப்படம், ஆதார், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளில் ஏதேனும் ஒன்றினை செல்லப்பிராணியின் புகைப்படம் கொடுத்து விண்ணப்பிக்கலாம். உரிம கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கப்படும். அங்கேயே வெறிநாய்க்கடிக்கு தடுப்பூசியும் வளர்ப்பு நாய்க்கு போடப்படும். அதன் பிறகு ஓரிரு தினங்களில் உரிமம் கிடைத்து விடும். இந்த உரிமம் ஓராண்டிற்கு செல்லுபடியாகும். ஓராண்டிற்கு 100 ரூபாய் கொடுத்து நாய் வளர்ப்பதற்கான உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம். ஆனால் இது மாதிரி உரிமம் இல்லாமல் நாய்களை வளர்த்தால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கவும் புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தில் இடம் உள்ளது. ரேபிஸ் தடுப்பூசி தெருநாய்கள் என்றாலும், வீட்டு நாய்கள் என்றாலும் பெரிய பிரச்னை அவை கடிப்பதால் வரும் ரேபிஸ் நோய். உஷாராக இல்லாவிட்டல் சில நேரங்களில் மரணம் கூட நேரலாம். ரேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் 100 சதவீதம் ரேபிஸ் நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால், இங்குள்ள அனைத்து நாய்க்கும் ரேபிஸ் நோய் இருக்கும் எனக் கூற முடியாது. நுாறில் ஒரு நாய்க்கு ரேபிஸ் நோய் தொற்று இருக்கக்கூடும். என்றாலும், எந்த நாய் கடித்தாலும், பின் விளைவுகளைத் தடுக்க ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதே பாதுகாப்பு. எனவே, வளர்ப்பு நாய்களுக்கு கால்நடை மருத்துவமனையை புதன்கிழமைதோறும் அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ளுவது உங்களுக்கும் பாதுகாப்பு; மற்றவர்களுக்கும் பாதுகாப்பு. இதுமட்டுமின்றி செல்ல பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் வயதாகி விட்டலோ, நோய் ஏற்பட்டாலோ, உரிமையாளர்கள் வெளியூர் மாற்றலாகி செல்லும் போதோ தெருவில் விட்டு விடுகின்றனர். அப்படி விடப்படும் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் நகராட்சிகளை அணுகி, செல்ல பிராணிகளை ஒப்படைத்துவிட்டு, நிம்மதியாக செல்லலாம்.

பொது இடங்களில்

அழைத்து செல்லும்போது....

புதுச்சேரியின் பொது இடங்களில் வளர்ப்பு நாய்களை உடன் அழைத்து செல்லலாமா, ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளதா, எந்தந்த இடங்களில் கட்டுப்பாடுகள் உள்ளது என்ற மக்களின் சந்தேகத்துக்கு நகராட்சிகளிடம் தெளிவான பதில்கள் இல்லை. இது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், 'கட்டுப்பாடுகள், தடை இல்லையெனில் தாராளமாக பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை அழைத்து செல்லலாம். ஆனால் அவை கயிற்றால் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதன் வாயும் மூடப்பட்டிருக்க வேண்டும். அதனுடைய மலத்தை அகற்ற பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்லலாம்' என்றனர்.

கருத்தடை

அவசியம்

இன சேர்க்கையால் வீடுகளில் வளர்ப்பு நாய்கள் அதிக எண்ணிக்கையில் குட்டிகள் போடும்போது, அவற்றை வளர்க்க முடியாமல் வீதிகளில் விடுகின்றனர். இதன் காரணமாகவும் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து சமூக பிரச்னையாகவும் உருவெடுத்து விடுகின்றன. வளர்ப்பு நாய்களை வளர்ப்போர், நாய்களுக்கு கருத்தடை செய்து கொள்ளலாம். இதன் மூலம் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் தடுக்கலாம்.

நாய்கள் அடிப்பட்டால்....

பார்க் இந்திய சாரிடபிள் டிரஸ்ட் தன்னார்வலர் சோலை ராஜன் கூறுகையில், 'நாய்களை கருத்தடை செய்வதன் மூலம் அவற்றின் எண்ணிக்கை தடுக்கலாம். ஆண் நாய்களுக்கு தடுப்பூசி மூலம் மலட்டுதன்மை ஏற்படுத்துவது ஆய்வில் நிலையில் தான் இன்னும் உள்ளது. இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை. எனவே இப்போதைக்கு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை மட்டுமே தீர்வு. ஆண்-பெண் நாய்களுக்கு தனித்தனியே செய்யலாம். புதுச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை அணுகலாம். இந்த நடைமுறை மனிதர்களுக்கு செய்வது மாதிரி தான் மேற்கொள்ளப்படும். ஒருவார கண்காணிப்பிற்கு பிறகு மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்துவிடலாம். நாட்டு இன நாய்கள் என்றால் நாங்களே ரேபிஸ் தடுப்பு ஊசி போட அனைத்து ஏற்பாடுகளை செய்து தருகிறோம். நாய்கள் அடிப்பட்டால் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்கிறோம். எங்களை 9487007552 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை