தமிழில் பெயர் பலகை கட்டாயம் களம் இறங்கும் தமிழ் வளர்ச்சி சிறகம்
புதுச்சேரி: தமிழில் தான் பெயர் பலகை வைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ள சூழ்நிலையில் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ் வளர்ச்சி சிறகம் களம் இறங்க உள்ளது.பல்வேறு மாநிலங்களில் தாய்மொழி எழுத்துக்களில்தான் வணிக நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக நகராட்சிகளில் கூட, தமிழ்மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்களில் தாய்மொழி இடம் பெறுவது அரிதாகிவிட்டது என எம்.எம்.ஏ.,க்கள் குற்றம்சாட்டினர்.இதற்கு பதிலளித்த முதல் வர் ரங்கசாமி, புதுச்சேரியில் உள்ள வணிகர்கள், வியாபாரிகள் தாய் மொழி யான தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.முதல்வர் ரங்கசாமி உத்தரவினை தொடர்ந்து தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக வியாபாரிகளிடம் நாளை 25ம் தேதி முதல் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ் வளர்ச்சி சிறகம் முடிவு செய்துள்ளது. ஆங்கில சொற்கள், பிற மொழிசொற்களுக்கு இணையான தமிழ் சொற்களுடன், கூடிய துண்டுபிசுரங்களை கடை கடையாக வியாபாரிகளை சந்தித்து விநியோகிக்க முடிவு செய்துள்ளது.