தமிழக வெற்றிக் கழக மாநாடு பந்தல் கால் நடும் விழா
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழா நடந்தது.நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநில மாநாடு வரும் 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடக்கிறது. அதனையொட்டி பந்தல் கால் நடும் விழா நேற்று விடியற்காலை 4:30 மணிக்கு, மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் பூமி பூஜையுடன் துவங்கியது.புதுச்சேரி விக்னேஷ் குருக்கள் தலைமையில் சபரீஷ், சுந்தரேஸ்வரன் குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ படங்களுடன் மும்மதத்தின் புனித நீர் தெளித்து பூஜை நடந்தது. தொடர்ந்து, 4:50 மணிக்கு பந்தல் அமைப்பாளர் சென்னை ஆனந்தன், பந்தகாலை நட்டதும், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட நிர்வாகிகள், திரிபுரசுந்தரி சமேத திரிசூலநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக தீர்த்தம், துரை அழகர் கோவில் தீர்த்தம், நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி ஆலையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் பந்தகாலில் தெளிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தொண்டர்கள் மாநாடு நடைபெறும் இடத்திலேயே ஆங்காங்கே தனித்தனியாக பூஜை செய்தனர்.டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, மாவட்ட தலைவர் மோகன், துணைத் தலைவர் வடிவேல், வழக்கறிஞர் அரவிந்தன், இளைஞரணி தலைவர் மோகன், விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர் சேகர், செயலாளர் காமராஜ், பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இரவு முதல் திரண்ட தொண்டர்கள்
பந்தகால் நடும் விழாவிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் இரவே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 5000க்கும் மேற்பட்டோர் மாநாடு நடைபெறும் இடத்தில் குவிந்தனர்.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்த வாகனங்களை, சாலையின் மேற்கில் உள்ள திடலில் நிறுத்துமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், முறையான திட்டமிடல் இல்லாததால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், பிற வாகனங்கள் 3 கி.மீ., துாரத்திற்கு ஊர்ந்து சென்றன.விழா நடைபெற்ற இடத்தில் இருக்கை வசதி இல்லாததால், தொண்டர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மாநிலச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பவுன்சர்கள் புடைசூழ வந்தாரே தவிர தொண்டர்களைப் பற்றி சிந்திக்கவில்லை.