பாகூர் மூலநாதர் கோவிலில் தாராபிஷேகம் துவங்கியது
பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமிக்கு, அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று துவங்கிய தாராபிஷேகம் வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.பாகூரில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு தாராபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கிறது. இதனை முன்னிட்டு, நேற்று மாலை 6.00 மணிக்கு, மூலநாதர் சுவாமிக்கு 108 லிட்டர் பன்னீர், பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, இரவு 7.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அக்னி நட்சத்திர நாட்கள் முழுவதும் சுவாமியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரத்தில் நிரப்பப்பட்ட பன்னீர், ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள், சிவலிங்கத்தின் மீது இடைவிடாது 24 மணி நேரமும், துளி துளியாக விழும் படியான தாராபிஷேகத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அக்னி நட்சத்திர நாட்களில் நடைபெறும் தாராபிஷேகத்திற்கு, பன்னீர், ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மற்றும் பொருட்களை தர விரும்பும் பக்தர்கள், அவற்றை அளிக்கலாம் என கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.