உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை குப்பை மேடாக மாறும் அவலம்

அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை குப்பை மேடாக மாறும் அவலம்

புதுச்சேரி: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அமைக்கப்பட்ட அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை, அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத காரணத்தினால், குப்பை மேடாக மாறி வருகிறது. புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, புதுச்சேரி 100 அடி சாலையில் இருந்து அரும்பார்த்தபுரம் வரை புதிய புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புறவழிச்சாலையை அதிகாரிகள் கவனிக்காத காரணத்தினால், குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. புதுச்சேரி, உழவர்கரை மற்றும் வில்லியனுார் பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் தேவையற்ற பொருட்கள், ஒர்க் ஷாப் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பொருட்கள் வாகனங்களில் ஏற்றி வந்து, மக்கள் நடமாட்டம் இல்லாத அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை ஓரங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இந்த குப்பைகளில் பெரும்பாலும் மக்காத ரெக்சின், பிளாஸ்டிக், பாலிதீன், டயர் போன்ற பொருட்களே அதிகம் உள்ளது. இவை மண்ணில் மட்காமல் கிடப்பதால், சில நேரங்களில் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால், இப்பகுதி முழுவதும் கரும் புகை மூட்டம் சூழ்ந்து சுற்றுச் சூழலையும், மண் வளத்தையும் பாதித்து வருகிறது. இதனை தவிர்க்க நகராட்சி மற்றும் கொம்யூன் அதிகாரிகள் அவ்வப்போது இந்த புறவழிச்சாலையை பார்வையிட்டு, குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிப்பது போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் அலட்சியம்

அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள் மற்றும் வில்லியனுார் கொம்யூன் கட்டுப்பாட்டில் உள்ளது. இருந்த போதிலும், மூன்று உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளின் அலட்சியத்தால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அமைக்கப்பட்ட புறவழிச்சாலை, குப்பை மேடாக மாறி வருவது வேதனையளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி