படுக்கை இன்றி நோயாளிகள் அவதி பாய் கொடுத்து கலாய்த்த காங்., கட்சி
புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட காய்ச்சல் பாதித்து ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். டெங்குவிற்கு இதுவரை தனி வார்டு ஏதும் அமைக்கப்படவில்லை. கடும் காய்ச்சலுடன் வரும் நோயாளிகள் பொதுசிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். போதிய அளவில் படுக்கை வசதிகள் இல்லாததால், வார்டுகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. கையில் 'வென்ப்ளான்' ஊசியுடன், வரண்டாக்களில் பாய் விரித்து படுத்து கொண்டு சிகிச்சை பெறுகின்றனர்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கண்ட காங்., கட்சி, அரசின் நிர்வாக திறமையை கலாய்க்கும் விதமாக, அரசு மருத்துவமனை வார்டுகளில் நிரம்பி வழியும் நோயாளிகளுக்கு வரண்டாக்களில் படுக்க வசதியாக பாய்கள் வழங்கி கலாய்த்தனர்.