ஒட்டு மொத்த நிர்வாகமும் சீர்குலைந்துள்ளது: எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் குற்றசாட்டு
புதுச்சேரி: ஒட்டு மொத்த நிர்வாகமும் சீர்குலைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் நாஜிம் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர், கூறியதாவது: ஆட்சி அமைந்த இந்த ஆறு மாதத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்குலைந்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு பவர் சென்டர்கள் உள்ளன. இதன் மூலம் நிர்வாகம் தேக்கமடைந்துள்ளது. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் செயலர்களை பார்க்க முடியவில்லை. அரசு மருத்துவமனைகளில் காலிபணியிடங்கள் நிரப்ப தாமதமாகின்றன. குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு பெற முடியவில்லை. வீடு கட்டிவிட்டு அப்ரூவல் வாங்க முடியவில்லை. நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். பி.சி.எஸ்., அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. புதுச்சேரி தற்போது கொலைச்சேரியாக மாறி வருகிறது. கடந்த காலங்களில் குறைந்த அளவிலான ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருந்தனர். தற்போது நிறைய பேர் உள்ளனர். இருந்தும் கொலைகளை தடுக்க முடியவில்லை. மக்கள் வெளியே நடக்க பயமாக உள்ளது. இதற்கு கஞ்சாதான் காரணம். இதற்கு மாநில அந்தஸ்துதான் தீர்வு என்றால் தி.மு.க., எம்.பி.,க்களை டில்லி அழைத்து சென்று போராட்டம் நடத்துவோம். எங்கள் கூட்டணி குழப்பத்தால் நாங்கள் தோல்வி அடைந்தோம்’ என்றார். பேட்டியின் போது எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், விக்னேஷ்கண்ணன் உடனிருந்தனர்.