மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 10.14 லட்சம்: ஆண்களை விட 64,337 பெண்கள் கூடுதல்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணக்கை 10 லட்சத்து 14 ஆயிரத்து 70 ஆக உள்ளது. இது கடந்தாண்டைவிட 0.13 சதவீதம் குறைவாகும்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, கடந்த 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளின் புகைப்பட வாக்காளர் பட்டியலில் சுருக்குமுறை திருத்தப்பணி கடந்த அக்., 29ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை நடந்தது.அதில், புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் வெளியிட்டார்.கடந்த அக்டோபர் 29ம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 10,15,379 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இறுதி பட்டியலில் புதிதாக 22,154 வாக்காளர்கள் (2.18 சதவீதம்) சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு உள்பட பல்வேறு காரணங்களால் 23, 463 பேர் (2.31 சதவீதம்) நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வாக்காளர் இறுதி பட்டியலில் 0.13 சதவீதம் பேர் அதாவது 1,309 வாக்காளர்கள் குறைந்துள்ளனர். இதனால் மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 10 லட்சத்து 14 ஆயிரத்து 70 ஆக குறைந்துள்ளது.இதில் ஆண்கள்-4,74,788; பெண்கள்-5,39,125, மூன்றாம் பாலித்தனர்-157. வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட 64,337 பெண்கள் கூடுதலாக இடம் பிடித்துள்ளனர். 18 வயது முதல் 19 வயது வரையுள்ள புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 24,154 ஆகும்.பிராந்தியம் வாரியாக: புதுச்சேரி-7,76,815, காரைக்கால்-1,68,185, மாகி-29,448, ஏனாம்-39,622 வாக்காளர்களாக உள்ளனர். புதுச்சேரி மாவட்டம்:
புதுச்சேரி மாவட்ட வாக்காளர் இறுதி பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட, அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர். கடந்த வரைவு வாக்காளர் பட்டியலில் மாகி, ஏனாம் உள்ளிட்ட 25 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள்-3,98,657, பெண் வாக்காளர்கள்-4,49,246, மூன்றாம் பாலித்தவர்-129 என மொத்தம் 8,48,032 வாக்காளர்கள் இருந்தனர்.சுருக்கு முறை திருத்த பணியில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள 47,083 படிவங்கள் பெறப்பட்டன. அவற்றில் 44,062 படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2,942 படிவங்கள் நிராகரிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், ஆண் -3,97,103, பெண் - 4,48,652, மூன்றாம் பாலினத்தவர்-130 என மொத்தம் 8,45,885 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த வரைவு பட்டியலை ஒப்பிடும்போது, 2147 வாக்காளர்கள் குறைவு.இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் கூறியதாவது: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட 6ம் தேதி முதல் ஏழு நாட்களுக்குள் பொதுவிடுமுறை தவிர்த்து அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.18-19 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், திருத்தம் செய்ய விண்ணப்பித்தவர்களுக்கும் விரைவு தபால் மூலம் அவரவர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த 1ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தும் விண்ணப்பிக்க தவறியவர்களும், 01.04.2025, 01.07.2025 மற்றும் 01.10.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், https://voters.eci.gov.inமற்றும் voterhelpline app,ஓட்டுச்சாவடி நிலைய அதிகாரிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், தேர்தல் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள 1950 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.