காங்., - தி.மு.க., தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடிப்பதால் சிக்கல்
புதுச்சேரி: புதுச்சேரி இண்டி கூட்டணியில் காங்., -தி.மு.க, இடையே நடந்த தொகுதி பங்கீட்டு பிரச்னையில் தொடர் இழுபறி நீடிப்பதால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடும் சூழல் உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க., - காங்., கூட்டணி உறுதியானது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இக்கூட்டணி தொடரும் என, இரு கட்சி தலைமைகளிலும் உறுதி செய்தனர். ஆனால் புதுச்சேரியில் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில்இரு கட்சிகளுக்கிடையேகடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரு கட்சிகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் தி.மு.க., தரப்பில் சரிபாதி தொகுதிகளில் போட்டியிடலாம் என கருத்து தெரிவித்தனர். அதற்கு காங்., கட்சியின் கட்சி தலைமையில் ஆலோசித்து கூறுவதாக கூறிவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்த காங்., மேலிட பொறுப்பாளர்கள் கிரீஸ் சோடங்கர், அஞ்சலி நிம்பில்கர் ஆகியோர், காங்., அலுவலகத்தில் மாநில தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்ட குழுவினருடன் கருத்துக்களை கேட்டறிந்தனர். அதில், கடந்த முறை போன்றே அதிக தொகுதியில் நாம் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதற்கிடையே தி.மு.க., மாநில பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மாநிலத்தில் 30 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமையிலான 7 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவினர், இரவு 8 மணிக்கு மேல் தி.மு.க.,விற்கு அழைப்பு விடுத்து, அஜந்தா சிக்னல் அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றனர். அதனைத் தொடர்ந்து ஜெகத்ரட்சகன் தலைமையிலான தி.மு.க., பேச்சுவார்த்தை குழுவினர் ஓட்டலுக்கு சென்றனர். அங்கு, ஜெகத்ரட்சகனை மட்டும் பேச்சுவார்த்தைக்கு உள்ளே அனுப்பிவிட்டு, மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்டோர் வெளியே காத்திருந்தனர். சற்று நேரத்தில் காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ்சோடங்கர் மற்றும் அஞ்சலி நிம்பில்கர் ஓட்டலுக்கு வந்தனர். அவரை, ஜெகத்ரட்சிகன் சால்வை அணிவித்து வரவேற்றார். ஆனால், பேச்சுவார்த்தை துவங்கப்படாமல் இருதப்பினரும் அமைதி காத்தனர். பின்னர், காங்., முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் வெளியே வந்து, சிவா உள்ளிட்ட தி.மு.க.,வினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால், அவர்கள், மாநில பொறுப்பாளர் நேரடியாக பேசி முடிவெடுக்கட்டும் என்றனர். பின்னர், ஒரு வழியாக சிவா உள்ளிட்டோர், உள்ளே சென்று காங்., கட்சியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருதரப்பிலும், காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இரவு 8:45 மணிக்கு துவங்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை இரவு 9:30 மணிக்கு மேலும் நீடித்தது. இருதப்பிலும், கூட்டணி க ட்சிகளுக்கு யார் தொகுதி விட்டு கொடுப்பது என்பதில் காரசார விவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் தி.மு.க.,வினர் நாளை கட்சி தலைமையில் பேசி முடிவு செய்வதாக கூறிவிட்டு 9:40 மணிக்கு கூட்டத்தில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து காங்., கட்சியினர் அவர்களுக்குள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். இருதரப்பிலும் சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாமல் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால், இரு கட்சிகளும் ஏற்கனவே முடிவு செய்தபடி தனித்து களம் காண்பார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.