திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத சமுதாய நலக்கூடம் சமூக விரோதிகள் கூடமாக மாறியது
அரங்கனுார் - நிர்ணயப்பட்டு கிராமத்தில் திறப்பு விழா நடந்தும் பயன்பாட்டிற்கு வராத சமுதாய நலக்கூடம், சமுக விரோதிகளின் கூடமாக மாறி உள்ளது.ஏம்பலம் தொகுதி, அரங்கனுார் - நிர்ணயப்பட்டு கிராம மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை குறைந்த செலவில் நடத்திட பொது இடம் இல்லாததால், சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால், சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த 2006ம் ஆண்டு காங்., ஆட்சியின்போது, பல கோடி ரூபாய் செலவில், அரங்கனுார் - நிர்ணயப்பட்டு மெயின் ரோட்டில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியின் பின் பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.2011ல் ஆட்சி மாற்றம் ஏற்படவே சமுதாய நலக்கூட திட்ட பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு மீண்டும் காங்., ஆட்சி பொறுப்பேற்ற பின், ராதாக்கிருஷ்ணன் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் சமுதாய நலக்கூட திட்ட பணிகள் முடிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு பிப்., 27ம் தேதி திறப்பு விழா நடந்தது.6 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், திருமண மண்டபத்திற்கு இணையாக உள்ள இந்த சமுதாய நல கூடத்தில், நாற்காலிகள், மேஜைகள், சமையல் உபகரணங்கள், தண்ணீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் உள்ளது.இதனால், இப்பகுதி மக்கள் பல கி.மீ., மீட்டர் தொலைவில் உள்ள திருமண மண்டபத்தில் பெரும் சிரமங்களுக்கு இடையே சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். செடி, கொடிகள் முளைத்து பாழடைந்து வரும் இந்த சமுதாய நலக்கூடம், சமூக விரோதிகளின் கூடமாக மாறி விட்டது. மதுஅருந்துவது உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதனால், அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அச்சமடைகின்றனர்.எனவே, சமுதாய நலக்கூடத்தில், நாற்காலிகள், மேஜைகள், சமையல் உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.